×

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை விஜய் கருத்தில் உடன்பாடில்லை: திருமாவளவன் பளீச்

திருச்சி: எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. விஜர் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் நான் பங்கேற்க முடியாமல் போனதற்கு , திமுக அல்லது திமுக கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்ற கருத்தை விஜய் பேசியிருக்கிறார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை. ஆனால், எங்கள் இருவரையும் வைத்து அரசியல் சாயம் பூசியவர்கள் யார்? அதற்கு என்ன பின்னணி என்பதை ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை குறி வைத்து குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கி விடுவார்கள் என்பதால் தான், நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை. இதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நான் முன்கூட்டியே கூறிவிட்டேன். இதுநான் சுதந்திரமாக எடுத்த முடிவு. இவ்வாறு கூறினார்.

இந்நிலையில் சென்னை யில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே எழுதிய அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ICONOCLAST நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசியதாவது: விசிக தெளிவோடுதான் எல்லாவற்றையும் அணுகுகிறது. தடுமாறுகிறார் திருமா, பின் வாங்குகிறார் திருமா என்கிறார்கள், பிறர் தடுமாறுகிறார் என்று சொல்வதனால் விசிகவினருக்கு எந்த தடுமாற்றமும் ஏற்பட்டு விடக்கூடாது. என் மீது உள்ள நம்பிக்கையை எப்போதும் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய சுயமரியாதையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. கருத்தியலை மதிப்பீடு செய்யக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் யாருக்கும் தகுதி இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

* ஆதவ் அர்ஜூனாவிடம் விளக்கம் கேட்கப்படும்

திருமாவளவன் கூறுகையில், ‘திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் விளக்கம் கேட்கப்படும். ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச சுதந்திரம் உண்டு. ஆதவ் அர்ஜூனாவுக்கு, நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதைத்தான் அவர் வெளிப்படுத்தி உள்ளார். உலகம் முழுவதும் தற்போது மக்களாட்சி தான் நடை பெறுகிறது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பல காலங்கள் ஆகிறது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடைபெறுகிறது’ என்றார்.

The post எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை விஜய் கருத்தில் உடன்பாடில்லை: திருமாவளவன் பளீச் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Thirumavalavan ,Trichy ,Vijar ,Vishika ,Trichy airport ,President ,Ambedkar ,
× RELATED புத்தக விழாவில் பங்கேற்காமல் இருக்க...