×

மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வென்றுதான் பதவிக்கு வந்தார்: ஆதவ் அர்ஜூனாவுக்கு பாடம் எடுத்த டிடிவி

கோவை: பிறப்பால் யாரும் முதல்வராவதில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்று துணை முதல்வராகி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின், அதை எப்படி தவறு என்று கூற முடியும் என ஆதவ் அர்ஜூனாவுக்கு டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். கோவையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் அரசியலில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்து தான் ஒருவர் முதல்வராகிறார். இதில், பிறப்பால் ஒருவர் முதல்வராகிறார் என்று எந்த அர்த்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறுகிறார் என தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் மக்கள் ஓட்டு போட்டு எம்எல்ஏ வாக தேர்வு பெற்று தான் துணை முதல்வராகி உள்ளார். அதனால், அதை எப்படி குறை கூற முடியும்.

ஒருவரின் தந்தையோ, உறவினரோ அரசியலில் இருந்தால் மகன், மகள்கள் அரசியலுக்கு வருவது உலகம் முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒருவரை திட்டமிட்டு புரமோட் செய்வது கூடாது என கூறுகிறார்கள். ஒருவரை புரமோட் செய்யக் கூடாது தான். அதையும் மீறி மக்களும் ஓட்டுப்போட்டு வருகிறார்கள். அதை எப்படி தடுக்க முடியும் என்று தெரியவில்லை. அரசியலில் சீனியாரிட்டி முக்கியம் தான். ஆனால், சில கட்சி மற்றும் அரசு பதவிகளுக்கு சீனியாரிட்டி மட்டும் போதுமானது அல்ல. யதார்த்தத்தைதான் கூறுகிறேன்.

பிறப்பால் ஒருவரை முன்னிருத்தக் கூடாது என்று ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தால், ஒருவர் தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் போது எப்படி அதை தடுக்க முடியும், எப்படி அது தவறாகும் என கேட்கிறேன். எந்த கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவது இயல்பானது. அதேபோல திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளனர். அதில், அகம்பாவம், ஆணவம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  ஆண்ட கட்சிகள், ஆளப்போகும் கட்சிகள் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவதும், அதற்கு எதிர்க்கட்சிகள், அதை முறியடிப்போம் என்று கூறுவதும் இயல்பு தான். விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற யூகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வென்றுதான் பதவிக்கு வந்தார்: ஆதவ் அர்ஜூனாவுக்கு பாடம் எடுத்த டிடிவி appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,TTV ,Aadhav Arjuna ,Coimbatore ,TTV.Thinakaran ,Deputy Chief Minister ,AAMUK ,general secretary ,Dinakaran ,DTV ,
× RELATED புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை: திருமாவளவன் பேட்டி!