×

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் பல பெண்களை காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிய தில்லாலங்கடி வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை சுடலைமுத்து தெருவை சேர்ந்த இளம்பெண்ணின் பெற்றோர் சமூக வலைதளங்களில் வரன் பார்க்கும் திருமண பதிவு மையத்தில் பதிவு செய்திருந்தனர். இதை பார்த்த கன்னியாகுமரி மாவட்டம் நெய்தமங்கலம் சித்திரைவிளையை சேர்ந்த விஜின் (27) என்பவர், இளம்பெண்ணின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, உங்கள் மகளை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் நிச்சயம் செய்து, ஒரு லட்ச ரூபாய் வரதட்சணை, 25 சவரன் நகை போடும்படி விஜினின் பெற்றோர் கூறியுள்ளனர். இதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த 2ம்தேதி வண்ணாரப்பேட்டை ஜே.பி.கோயில் தெருவில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடக்க இருந்தது. அப்போது அங்கு வந்த கடலூரை சேர்ந்த இளம் பெண், ‘விஜின் என்னை ஏமாற்றிவிட்டார், திருமணம் செய்து என்னுடன் ஒரு வருடம் வாழ்ந்துவிட்டு இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரை என்னுடன் சேர்த்து வைக்கவேண்டும்’ என கூச்சலிட்ட தால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பெண் வீட்டார் கேட்டபோது, ‘இந்த பெண் ஏமாற்றுகிறார், பணம் பறிப்பதற்காக நாடகமாடுகிறார்’ என கூறி பெண் வீட்டாரை சமாதானம் செய்து திருமணத்தை நடத்தினர். இதனிடையே, சமூகவலைதளத்தை பார்த்த பெண் வீட்டாரின் உறவினர் ஒருவர், பல பெண்களை ஏமாற்றியதாக விஜின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் இருப்பதாக பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், விஜினின் செல்போனை சோதனை செய்தபோது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பல பெண்களுடன் விஜினுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி அவரை 6 மாத கர்ப்பமாக்கியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்து சமாதானம் செய்துள்ளனர்.

2022ம் ஆண்டு தென்காசியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றியுள்ளார். 2023ல் கடலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி ஏமாற்றியுள்ளார். பெண்களை திருமணம் செய்து சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு பணம் மற்றும் நகைகளை சுருட்டிகொண்டு தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக விஜின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜினை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விஜினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விஜினுக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை கிறிஸ்டோபர், தாய் விமலாராணி, புேராக்கர் எபினேசர், விஜின் தாய் மாமா லோகிதாஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் பல பெண்களை காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிய தில்லாலங்கடி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Instagram ,Facebook ,Dandiyarpettai ,Pudhuvannarpet Sutalamuthu Street ,Varan Parku Marriage Registration Centre ,Vijin ,Neydamangalam Chitraivala, Kanyakumari district ,Dinakaran ,
× RELATED ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக...