×

மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்தால் தான் இந்தியா முழுவதும் முழுமையாக சேவை ஆற்ற முடியும்: சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு அகடாமியின் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: முதலில் தாய்மொழி, இரண்டாவது சகோதர மொழி, கடைசியாக பிற மொழி என மொழியை கற்க வேண்டும். எந்தவித திணிப்பிற்கு எதிரானவன் நான் அல்ல. தமிழர்கள் கடமையுணர்ச்சி, கடுமையான உழைப்பாளிகள். சிறந்த குடிமை பணி அதிகாரிகளும் தமிழகத்தில் இருந்து தான் வந்துள்ளனர். நான் தமிழ் நாட்டில் நின்று கொண்டு தான் சொல்கிறேன் இந்தி படியுங்கள். குழந்தைகளுக்கு இந்தி கற்க உதவுங்கள் தேசிய அளவில் அது அவர்களுக்கு உதவும்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் எங்கள் நெல்லூரிலும் நடைபெற்றது நானும் கலந்து கொண்டேன். ரயில் நிலையத்திலும், தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தோம். பிற்காலத்தில் பாஜக தேசிய தலைவர் ஆன போது தான் புரிந்து கொண்டேன். தாரை பலகையில் பூசவில்லை. எனது முகத்தில் பூசிக்கொண்டதாக உணர்ந்தேன். தேசிய தலைவராக இருக்கும் போது இந்தியில் உரையாட முடியவில்லை என வருந்தினேன். 2% மக்களுக்கும் மட்டுமே ஆங்கிலம் புரியும், இந்தி மட்டுமல்ல முடிந்த வரை பல இந்திய மொழிகளை கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்தியாவை பற்றி எதிர்மறையாக கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். நமது பிரதமரை அனைத்து நாடுகளும் வரவேற்கின்றனர். எங்கு சென்றாலும் நேர்மையுடன் லஞ்சம் வாங்காமல் பணியயை செய்ய வேண்டும்.

ஒரு அதிகாரியாக அரசியலை புறந்தள்ளி மனசாட்சியையும், அரசியலமைப்பு சட்டதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். மாணவர்கள் அனைவரும் பன்மொழி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இந்தியா முழுவதும் தங்களது சேவைகளை முழுமையாக ஆற்ற முடியும். கடந்த 20 ஆண்டுகளாக பல ஐஏஎஸ், ஐ.பி.எஸ்களை உருவாக்கிய சங்கர் அகாடமிக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய அரசின் முன்னாள் டிஎஸ்சி செயலாளர் டி.ராமசாமி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஜி.ஏ.ராஜ்குமார், மச்சேந்திரநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்தால் தான் இந்தியா முழுவதும் முழுமையாக சேவை ஆற்ற முடியும்: சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Venkaiah Naidu ,Chennai ,Shankar IAS Academy ,Anna Centenary Library ,Vaishnavi Shankar ,Executive Director ,Academy ,Former ,Vice President ,
× RELATED சொல்லிட்டாங்க…