×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கலாம் : ஐகோர்ட் அறிவுறுத்தல்!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா, அப்போதைய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா ஆகியோரை நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவை சுழன்றடித்த சூறாவளிதான் கோடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம். 7 ஆண்டுகள் ஆன நிலையிலும், கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஒளிந்திருக்கும் மர்ம முடிச்சுகள் இன்று வரை அவிழவில்லை.2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு, கோடநாடு எஸ்டேட் பாதுகாவலரான ஓம் பஹதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சயான், மனோஜ், தீபு உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடமும் விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். .இந்த நிலையில், தீபு, சதீசன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மட்டும் விசாரணை நடத்த அனுமதியளித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், வி.கே.சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

இதனிடையே, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.அதில், கோடநாடு எஸ்டேட்டில் காணாமல் போன பொருட்கள் எவை எவை என்பது பற்றி சசிகலா மற்றும் இளவரசிக்குத் தான் தெரியும் என்றும், புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீது நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில், “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லாததால் எதிர்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது? இபிஎஸ்., மற்றும் சசிகலா, அப்போதைய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். இபிஎஸ்., சசிகலாவை விசாரிக்க தடை விதித்த நீலகிரி நீதிமன்றத்தின் உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிடுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கலாம் : ஐகோர்ட் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Sasikala ,Kodanadu ,iCourt ,Chennai ,Godanadu ,Edapadi Palanisami ,District ,Chennai ICourt ,Murali Rampa ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு...