- சாம்பியன்ஸ் கோப்புத்
- தொடர்
- பாக்கிஸ்தான்
- துபாய்
- பாக்கிஸ்தான் கிரிக்கெட்
- ஐக்கிய அரபு நாடுகள்
- இந்தியா
- தின மலர்
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் காரணமாக, இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரைபாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆட மறுத்துவிட்டது. இதனால் பிசிசிஐ சார்பாக ஆசியக் கோப்பையை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் யோசனை முன் வைக்கப்பட்டது.
இதனை அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஏற்ற நிலையில், பாகிஸ்தான் மட்டும் ஏற்கவில்லை. இந்தியஅணி பாகிஸ்தான் வந்து தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இதன் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தது. அதில், சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்தினால், 2031ம் ஆண்டு வரை இந்தியாவில் நடக்கும் ஐசிசி தொடர்களையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும். ஐசிசி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை ஒரே குரூப்பில் கொண்டு வரக் கூடாது. ஐசிசி தரப்பில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதிக்கான சதவிகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் விளையாடும் வகையில் முத்தரப்பு தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் புதிதாக முன்வைத்தது. இதற்கு பிசிசிஐ தரப்பில் எந்த இசைவும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படவிருந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தங்களின் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்ததால், ஆலோசனை கூட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக நடக்கவுள்ள 15 போட்டிகளில் 5 போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி விளையாடும் 3 லீக் போட்டிகளும், ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியும் அடங்கும்.
The post சாம்பியன் டிராபி தொடருக்கு நீடிக்கும் இழுபறி; இந்தியாவுடன் முத்தரப்பு தொடர்.! பாகிஸ்தானின் புதிய நிபந்தனை appeared first on Dinakaran.