×

எண்ணூர் தாமரை குளத்தில் உள்ள 52 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடக்கம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர். டிச. 6: எண்ணூர் தாமரை குளத்தில் உள்ள 52 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டு, சத்தியவாணி முத்து நகர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. சுமார் 5.32 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்திலிருந்து மழைநீர் வருவதால் மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் இந்த குளம் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இந்த குளத்தில் தனியார் சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியிருப்பதால் குளத்தின் பரப்பளவு சுருங்கி, மழைநீரை சேமிக்க முடியாமல் தண்ணீர் வெளியேறுவதால் அருகில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த குளத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தனியார் ஒருவர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 54 வீடுகள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டது. அவற்றை அகற்ற திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் அவகாசம் கேட்கவே, 2 வீடுகளை மட்டும் இடித்துவிட்டு மற்றவர்களுக்கு தாங்களாகவே இடித்துக்கொள்ள அவகாசம் அளித்தனர். ஆனால் 10 மாதங்கள் முடிந்த பின்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் 2ம் கட்டமாக மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையில் செயற்பொறியாளர் பாபு, தாசில்தார் சகாயராணி மற்றும் 75 மாநகராட்சி ஊழியர்கள், 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கினர்.

அப்போது அங்கு இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரித்தனர். ஆனால் அதற்கு பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நாங்கள் கைவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து எண்ணூர் காவல் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post எண்ணூர் தாமரை குளத்தில் உள்ள 52 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடக்கம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ennore Tamarai Pond ,Tiruvottiyur ,Ennore Lotus Pond ,lotus pond ,Sathyavani Muthu Nagar ,Thiruvotiyur Mandal, 1st Ward ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...