×

மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்; அணுமின் நிலைய இயக்குனர் சேஷய்யா திறந்து வைத்தார்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சென்னை அணுமின் நிலையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், அணுமின் நிலையம் அருகில் உள்ள கிராமப்புற மக்களின் நல மேம்பாட்டில் அக்கறை கொண்டு கல்வி, சுகாதாரமான குடிநீர் வழங்குதல், அறிவியல் ஆய்வகக் கூடம் அமைத்தல், மருத்துவ முகாம் நடத்துதல், மீனவ பகுதிகளில் சமுதாயக் கூடங்கள், குழந்தைகள் மையக் கட்டிடங்கள், கூடுதல் பள்ளி கட்டிடங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் அவற்றிற்கு நீர் ஆதாரங்களை அமைத்தல், மீன்வளத்தை அதிகரிப்பதற்காக செயற்கை பவளப் பாறைகள் அமைத்தல், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திறன் வளர்ப்பின் மூலமாக விவசாய தொழில் நுட்பத்தை உட்புகுத்தி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப்பணிகளை செய்கிறது.

மாமல்லபுரம் அர்ஜூனன் தபசுக்கு எதிரே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, போதிய இடவசதி இல்லாததால், மாணவர்கள் அவதிப்பட்டனர். இங்கு, 6 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை அணுமின் நிலையத்திற்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற சென்னை அணுமின் நிலையம், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 6 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட ரூ1.50 கோடி நிதி ஒதுக்கியது.

இந்நிலையில், கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷய்யா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி 6 வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து, மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ், பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன் குமார், வள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்; அணுமின் நிலைய இயக்குனர் சேஷய்யா திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Panchayat Union Middle School ,Nuclear Power Plant ,Seshaiah ,Mamallapuram ,Chennai Nuclear Power Plant ,Panchayat Union Middle School ,Chennai Nuclear Power Plant Administration ,Dinakaran ,
× RELATED கூடங்குளம் அணு மின் நிலையத்தில்...