×

கம்ப்யூட்டர் பொய் சொல்லாது மொய் வச்சியா… இந்தா பிடி பில்லு… தஞ்சை மண்டப திறப்பு விழாவில் ருசிகரம்

தஞ்சாவூர்: வீடு கிரகப்பிரவேசம், கடை திறப்பு விழா, திருமண விழா என எந்த விழாவாக இருந்தாலும் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் தந்து விருந்து வைப்பது நம் நாட்டு வழக்கம். விருந்துக்கு வருபவர்கள் மொய் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற இடங்களில் மொய் விருந்து வைத்து பணம் பெறுவதும் வழக்கம். அந்த வகையில் விஷேசம், விருந்து என்றால் மொய் முக்கிய இடத்தை பெறும்.
விருந்து சாப்பிட்ட பின் மொய்பணத்தை கவரில் வைத்து கொடுப்பார்கள். சிலர் மொய் வைக்காமலே கொடுத்ததுபோல கூறுவதும் உண்டு.

இதனால் சில விழாக்களில் நோட்டு போட்டு பெயர்களை எழுதி, மைக்கில் அறிவிப்பதும் உண்டு. இதையெல்லாம் தாண்டி தஞ்சாவூரில் ஒரு மண்டப திறப்பு விழாவில் மொய் வைத்தவர்களுக்கு உரிமையாளர் கம்ப்யூட்டர் ரசீது கொடுத்து அசத்தியுள்ளார். தஞ்சாவூர் அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியில் ஜெ.ஜெ. என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதன் உரிமையாளரான ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன் அழைப்பை ஏற்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்றனர். விருந்து சாப்பிட்ட பின் யார், யார் எவ்வளவு மொய் வைத்தார்கள் என்பதற்கு, ரசீது கொடுக்கப்பட்டது.

இதற்காக 15 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு பிரத்யேக கம்ப்யூட்டர்கள் வைத்து யார், யார் மொய் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. இதற்காக மொய் பெற தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டு, லேப்டாப், பணம் எண்ணும் இயந்திரம், ரசீது தரும் இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. மொய் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதில் மொய் கொடுத்தவர் பெயர், எந்த ஊர், அவரது முழு விலாசம், எவ்வளவு மொய் வைத்தார் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருந்தது. மண்டப உரிமையாளரின் இந்த செயல் உறவினர்கள், நண்பர்களை ஆச்சரியப்படுத்தியது.

The post கம்ப்யூட்டர் பொய் சொல்லாது மொய் வச்சியா… இந்தா பிடி பில்லு… தஞ்சை மண்டப திறப்பு விழாவில் ருசிகரம் appeared first on Dinakaran.

Tags : Tanjai ,Mandapa ,Thanjavur ,Pudukottai ,Sivagangai ,Vachiya ,Inda PD Billu ,Tanjore Hall ,
× RELATED தஞ்சாவூர் அருகே அறுவடை செய்யப்பட்ட...