×

வாய்ச்சவடால் விடுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால் வெள்ள நிவாரண நிதியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: வாய்ச்சவடால் விடுகின்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால், வெள்ள நிவாரண நிதியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: ஆளும்கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், குறைகளைச் சுட்டிக்காட்டும் இடத்தில் உள்ள எதிர்கட்சிகள் வஞ்சக சூழ்ச்சியோடு அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டுள்ளனர்.

சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால்தான் அதிக பாதிப்பு என எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். கடந்த காலத்தை அவர் திரும்பி பார்க்கவேண்டும். 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்த காரணத்தால் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பதை மறக்க முடியாது. சாத்தனூர் அணையைப் பொறுத்தவரை முதல்வரின் அறிவுறுத்தலின்படி, 25ம் தேதியிலிருந்து தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு உள்ளது.

இறுதியாக 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை முன்னறிவிப்பு செய்துதான் வெளியேற்றினோம். அதனால் தான் எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்திருந்தால் உயிர்சேதம் இன்றி எடுத்த நடவடிக்கைக்காகத் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து, வஞ்சக எண்ணத்தோடு குறை சொல்லி வருகிறார். வாய்ச்சவடால் விடுகின்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால், வெள்ள நிவாரண தொகையை ஒன்றிய அரசிடமிருந்து நிதியைக் கேட்டு பெற அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்.

பெஞ்சல் புயலின் தாக்கத்தை இந்திய வானிலை ஆய்வு மையமே கணிக்க திணறியது. அப்போதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களை ஒருங்கிணைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். வானிலை தரவுகளை மீறி புயலின் பாதிப்பு இருந்தது. அரசு தயார் நிலையில் இருந்த காரணத்தால்தான் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

* ‘சேற்றை வீசி அச்சுறுத்த நினைக்கிறார்கள்’
விழுப்புரம் மாவட்டத்தில், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் இருக்கும், இருவேல்பட்டு மற்றும் அரசூர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடிந்த பின்னர் அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரண பணிகளை வழங்கவும், ஆறுதல் கூறவும் அமைச்சர் பொன்முடி நேரடியாகச் சென்றிருந்தார்.

அந்த இடத்தில் குறிப்பிட்ட கட்சியின் மகளிரணி பொறுப்பில் இருக்கும் விஜயராணி என்பவரும், அவரது உறவினர் ராமர் என்பவரும் உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே அமைச்சர் மீது சேற்றை வாரி வீசியுள்ளனர். ஒருபுறம், நிவாரண பணிகளை அறிக்கையின் மூலம் பொய் வதந்தி பரப்பி முடக்க நினைக்கின்றனர். மறுபுறம் மக்கள் நல பணிகளில் ஈடுபடுவர்களை அச்சுறுத்தும் வகையிலும், பணிகளைத் தடுக்கும் வகையிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

The post வாய்ச்சவடால் விடுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால் வெள்ள நிவாரண நிதியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Vaishavad ,Union Government ,Minister ,PK Shekharbabu ,Chennai ,Shekharbabu ,Vaichavadal ,Tamil Nadu government ,Daravala ,
× RELATED எடப்பாடி பழனிசாமி சுயநலத்தோடு...