×

வங்கி கணக்குக்கு 4 நாமினி நியமிக்கலாம்: வங்கி சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

புதுடெல்லி: வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.78,000 கோடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு காரணங்களால் இப்பணத்தை எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வங்கி கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி, வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவின் உண்மையான நோக்கம் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்கை 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைப்பதே என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘இந்த சட்ட திருத்தங்கள் வங்கி துறையில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது. தமிழ்நாட்டில் நான் பள்ளி பயின்ற காலத்தில் இந்தி கற்கச் செல்லும் போது கூட, என் பள்ளியைத் தவிர்த்து, தெருக்களில் ஏளனம் செய்யப்பட்டேன். நீ இந்தி கற்க விரும்புகிறாய். ஆனால் நீ தமிழ் நாட்டில் வாழ்கிறாய். நீ கற்கும் இந்தி வட இந்திய மொழி என்ற கேலி குரல் இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது வேறு சில வேற்று மொழி மற்றும் சொற்களைக் கற்றுக்கொள்வது போல் உணரப்படுகிறது. தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு பகுதி அல்லவா?. நான் இந்தி கற்றுக்கொள்வதில் என்ன தவறு. மேலும் என்னை ‘வந்தேறி’ (வெளிநாட்டவர் என்று பொருள்படும் தமிழ் வார்த்தை) என்று அழைத்தனர்.

இந்தி திணிப்பு வேண்டாம் என்று சொன்னாலும் பரவாயில்லை, ஆனால் இந்தி கற்க வேண்டாம் என்று ஏன் என் மீது திணித்தார்கள்? இதை நான் கேட்க விரும்புகிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இனி வங்கி கணக்குகளுக்கு 4 நியமனதாரர்களை வாடிக்கையாளர்கள் நியமிக்கலாம். டெபாசிட் செய்பவர்கள் அடுத்தடுத்து அல்லது ஒரே நேரத்தில் நியமனதாரர்களை பரிந்துரை செய்யலாம். லாக்கர் வைத்திருப்பவர்கள் அடுத்தடுத்து மட்டுமே நியமனம் செய்ய முடியும். இதன் மூலம் டெபாசிட்தாரர்கள் காலமாகும் போது அவர்களின் குடும்பத்தினர் சிரமமின்றி பணத்தை எடுக்க முடியும். கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர் பதவிக்காலம் 8 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

The post வங்கி கணக்குக்கு 4 நாமினி நியமிக்கலாம்: வங்கி சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,New Delhi ,Union Budget ,Dinakaran ,
× RELATED பாஜ புதிய தலைவர் பிப்ரவரியில் தேர்வு