×

அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டியில் துணிகரம்: சர்வேயர், ஜவுளி வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

சேலம், டிச.3: சேலம் அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டியில் சர்வேயர் மற்றும் ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து எட்டரை பவுன் நகைகள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சேலம் அம்மாபேட்டை கனகராஜாகணபதி தெருவை சேர்ந்தவர் கவின் பிரசன்னா(29) இவர் இன்சூரன்ஸ் கம்பெனியில் சர்வேயராக இருக்கிறார். இவர்களுக்கு அந்த பகுதியில் சொந்தமாக ஓட்டு வீடு உள்ளது. அந்த வீட்டில் போதிய வசதி இல்லாததால் அதன் அருகே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து பிரசன்னா தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த ஓட்டு வீட்டுக்கு நேற்று காலை பிரசன்னா வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ₹30 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதுபற்றி பிரசன்னா அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகனா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள அமானிகொண்டலாம்பட்டி கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் லோகநாதன்(40), ஜவுளி வியாபாரி. இவர் குடும்பத்தோடு கடந்த 29ம் தேதி கோயம்புத்தூர் சென்றார். நேற்று காலை அவரை பார்க்க நண்பர் வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி லோகநாதனுக்கு அவர் போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அப்போது, தான் பேருந்தில் சேலம் வந்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அவர் வந்த பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 1 லட்சத்து 25 ஆயிரம் பணம், ஒன்றரை பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா?எனவும் ஆய்வு
செய்யப்பட்டு வருகிறது.

The post அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டியில் துணிகரம்: சர்வேயர், ஜவுளி வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Ammapet ,Kondolampatti ,Salem ,Kondalampatti ,Gavin Prasanna ,Kanagarajaganapati Street, ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது