×

கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீரை இரவோடு இரவாக அகற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, பெத்திகுப்பம், சுண்ணாம்புகுளம், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, மாநெல்லூர், ஆரம்பாக்கம், பாதிரிவேடு, போந்தவாக்கம், செதில்பாக்கம், கண்ணன்பாக்கம், பல்லவாடா, நாகராஜ் கண்டிகை, ஈகுவார்பாளையம், சாணபூத்தூர், கோங்கல், பெருவாயில், கிழ்முதலம்பேடு, பன்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெஞ்சால் புயல் காரணமாக ஆங்காங்கே காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் சாலையோரங்களில் உள்ள மரங்கள் விழுந்தன. இதனால் மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களில் மரங்களை அகற்றுதல், நீரை வெளியேற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. குறிப்பாக கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் கனமழை காரணமாக சுமார் 20 செமீ மழை பெய்துள்ளது. இதனால் ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்தது.

இதில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். இந்த மழைக்கு ஏற்கனவே இருபுறமும் முனுசாமி நகரிலிருந்து பஜார் வரை கால்வாய் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டியே தாமரை ஏரி உள்ளது. இந்த தாமரை ஏரிக்கு சிப்காட் பகுதியில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வரத்து அதிகமாக வந்ததால் கால்வாய்க்கு மேலே மழைநீர் சென்றது. இதனை அறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஜிஎன்டி சாலையில் உள்ள மழைநீரை இரவு பகலாக வெளியேற்றினர்.

இதனால் தற்போது அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் பேரூராட்சி சார்பாகவும் கால்வாய் அடைப்பு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தாமரை ஏரியை அகலப்படுத்தி மழைநீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் செல்ல தேர்வழி ஊராட்சி பிரித்திவி நகர் வழியாக பெரிய கால்வாய் அமைத்தால் விவசாயப் பகுதிகளுக்கும், அடுத்தடுத்த ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். இதனால் ஜிஎன்டி சாலையில் மழைநீர் தேங்காமல் ஏற்கனவே போடப்பட்டுள்ள கால்வாய் வழியாக செல்லும் என்றனர்.

The post கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi GND ,Kummidipoondi ,Pethikuppam ,Sunnambukulam ,Matharpakkam ,Kannankottai ,Manellor ,Arambakkam ,Patirivedu ,Ponthavakkam ,Kummidipoondi GND Road ,Dinakaran ,
× RELATED நண்பர்களுடன் குளிக்க சென்றபோது...