×

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி: கும்மிடிப்பூண்டி அருகே சோகம்

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி அருகே 15 வயது சிறுவன் காணாமல் போன விவகாரத்தில், கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி, பாலயோகி நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் பூபாலன் (47). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவருக்கு ஆந்திர மாநிலம் சத்தியவேட்டையைச் சேர்ந்த சரிதா (42) என்ற மனைவியும், பாவனா (15) என்ற மகளும், டெண்டுல்கர் குமார் (13) என்ற மகனும் உள்ளனர்.

இதில் மகன் டெண்டுல்கர் குமார் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் டெண்டுல்கர் குமார் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் இருந்து 1 கிமீ தூரம் உள்ள தரை கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது, தரை கிணற்றின் படியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் டெண்டுல்கர் குமார் தண்ணீரில் மூழ்கினான்.

இதனைக்கண்ட சக நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், மகனை காணவில்லை என அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் அவர்கள் மகனை காணவில்லை என கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், விசாரணையில் இறங்கிய சிப்காட் போலீசார் சிறுவன் கிணற்றில் மாயமானதை உறுதி செய்தனர். தொடர்ந்து, தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் கிணற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், நேற்று முன்தினம் தரைக்கிணற்றில் இருந்து சிறுவனை சடலமாக மீட்டனர். இதனையடுத்து, சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி: கும்மிடிப்பூண்டி அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Ponneri ,Boopalan ,Balayogi Nagar, Kummidipoondi Panchayat ,Kummidipoondi, Tiruvallur District.… ,
× RELATED பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்...