×

தேர்தல் ஆணையம் புகார் இவிஎம் ஹேக் செய்ய முடியும் என்றவர் மீது வழக்கு பதிவு: மும்பை போலீஸ் அதிரடி

புதுடெல்லி: மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தன்னால் ஹேக் செய்ய முடியும் என வீடியோ வெளியிட்ட நபருக்கு எதிராக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மின்னணு வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வாக்கு இயந்திரத்திலும், வாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு இயந்திரங்களில் அதிர்வெண்ணை பிரித்து அதை தன்னால் ஹேக் செய்ய முடியும் என சையது ஷுஜா என்பவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. சையது தன்னை சைபர் நிபுணர் என கூறிக் கொண்டுள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சையது ஷுஜா மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), ஐடி சட்டத்தின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சையது கூறியவை தவறான கருத்துக்கள் என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறியிருக்கும் மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி, இதுபோன்ற செயல்கள் கடுமையான குற்றம் என்றும், இதில் சம்மந்தப்பட்ட யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, 2019ல் இதே போன்ற வீடியோ ஒன்றை சையது ஷுஜா வெளியிட்டதற்காக அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது சையது ஷுஜா வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

The post தேர்தல் ஆணையம் புகார் இவிஎம் ஹேக் செய்ய முடியும் என்றவர் மீது வழக்கு பதிவு: மும்பை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Mumbai Police ,New Delhi ,Maharashtra ,Mumbai ,
× RELATED மகாராஷ்டிரா தேர்தலில் விவிபேட்,...