×

மாவட்ட வாரியாக வன குற்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வன குற்றங்கள் தொடர்பான விசாரணையில், வனத்துறைக்கு உதவுவதற்காக, வழக்கறிஞர்களை உள்ளடக்கிய மாவட்ட வாரியாக குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. வனத்துறை சார்பில் சிறப்பு அரசு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, வன குற்றங்கள் தொடர்பான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

அறிக்கையை பார்த்த நீதிபதிகள், நீதிமன்றம் கோரிய முழு விபரங்களை வனத்துறை தாக்கல் செய்யவில்லை. சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் பட்டியலிடப்பட்ட மரங்கள் கடத்தல் பற்றிய எவ்வித தகவலும் அறிக்கையில் இல்லை. வனவிலங்கு குற்றங்கள், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த அறிக்கையில், ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2024 வரையில், வனவிலங்கு குற்றங்கள் சந்தன மர வழக்குகள், பட்டியலில் உள்ள மரங்கள் பற்றிய வழக்குகள் குறித்த விபரங்கள் மட்டுமே உள்ளன. முழு விபரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, எங்கெல்லாம் வனக்கோட்டம் உள்ளது?,

விசாரணை கட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? ஆகியவை குறித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். வனவிலங்கு குற்றங்கள், பட்டியலிடப்பட்ட மரங்கள் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணை நிலை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவை குறித்து மாவட்ட வாரியாக விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post மாவட்ட வாரியாக வன குற்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Madurai ,Manoj Emmanuel ,Forest Department ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...