×

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது, கரூர் பழனியப்பா நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பரிசு பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிமுக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கரூர் அதிமுக வழக்கறிஞர் மாரப்பன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 அதிமுகவினர் தேர்தல் அதிகாரியை தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கரூர் டவுண் காவல்நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது தேர்தல் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி எம்.ஆர். விஜய்பாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகவும், கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Former Minister ,M. R. ,ICourt ,Vijayabaskar ,Chennai ,Former Transport Minister ,Chennai High Court ,Karur ,Dinakaran ,
× RELATED பாஜகவுடன் அதிமுக கூட்டணி...