×

குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்

திருவண்ணாமலை, நவ.30: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்த திருவண்ணாமலையில், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். இந்நிலையில், குபேர கிரிவலம் என்பது கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வருகிறது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதிகளில், ஏழாவது சன்னதியாக அமைந்திருக்கும் குபேர லிங்கம் செல்வத்துக்கு அதிபதியாக வணங்கப்படுகிறது. கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியும், சிவாராத்திரியும் இணைந்து வரும் நாளில், சிவனை வழிபட்டு குபேரனே கிரிவலம் செல்வதாக பக்தர்களின் நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியான குபரேன் கிரிவலம் செல்லும் நாளில், கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு குபேர கிரிவலம் செல்ல உகந்த நாளான நேற்று, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தது. அதையொட்டி, குபேர லிங்க சன்னதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். எனவே, தரிசன வரிசையை முறைப்படுத்த, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குபேர லிங்க சன்னதியை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் சென்றால் பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து தொடங்கி 14 கிமீ தூரம் கிரிவலம் சென்று மீண்டும் குபேர லிங்க சன்னதியில் நிறைவு செய்தனர். வழக்கம் போல, குபேர கிரிவலத்திற்கு பெரும்பாலும் ஆந்திர மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். ஆனாலும், கடந்த ஆண்டுகளை விட பக்தர்கள் வருகை நேற்று குறைந்திருந்தது.

The post குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Kubera Linga ,Kubera Krivalam ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Annamalaiyar ,Panchabhuta ,Krivalam ,Poornami ,Karthikai Deepam ,Kubera ,
× RELATED திருவண்ணாமலை தீபமலை உச்சியில் ஜோதி...