×

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


திருவள்ளூர்: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வருகிறது. செங்குன்றம் ஏரியின் நீர்மட்டம் 21.20 அடியை எட்டியுள்ளது. இங்கு 17 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல் சோழவரம் ஏரியில் தொடர் மழையால் 18.86 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இங்கு 9 மிமீ மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 24 அடியாக உயர்ந்தது. பூண்டி ஏரியில் நீர்மட்டம் 35 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரியில் மழை காரணமாக நீர்மட்டம் 35 அடியாக உயர்ந்துள்ளது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் மழை காரணமாக நீர்மட்டம் 36.61 அடியாக உயர்ந்தது. ஊத்துக்கோட்டையில் கிருஷ்ணா கால்வாயின் ஜீரோ பாயிண்டில் நீர்மட்டம் 1.17 மீட்டராக உள்ளது. இந்த மழையால் விவசாய பணிகள் ஜரூராக நடக்கிறது. வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒருசில இடங்களை தவிர, பிற பகுதிகளில் மழை பெய்யவில்லை. இரவு மற்றும் அதிகாலை வேளையில் குளிர்ந்த காற்று வீசுகிறது. கும்மிடிப்பூண்டியில் 17 மிமீ, சோழவரத்தில் 9 மிமீ, பொன்னேரியில் 26 மிமீ, செங்குன்றத்தில் 17 மிமீ மழை பெய்தள்ளது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில் மழை பெய்யவில்லை. ஜமீன் கொரட்டூரில் 4 மிமீ, பூந்தமல்லியில் 6 மிமீ, தாமரைப்பாக்கத்தில் 2 மிமீ, திருவள்ளூரில் 3 மிமீ, ஆவடியில் 5 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு, திருத்தணி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. குறிப்பாக கோவளம், கானத்தூர், நெம்மேலி, முதலியார்குப்பம், வடபட்டினம், தென்பட்டினம், கொடபட்டினம், கடப்பாக்கம், கடலூர், சின்னகுப்பம், பெரியகுப்பம், நடுகுப்பம், ஆலிகுப்பம், ஒய்யாலிகுப்பம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 38 மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாக்கும் வகையில் ஆங்காங்கே சமுதாய கூடங்கள், பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம், பேரிடர் மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர்.

மேலும் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்தூர், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், காட்டாங்கொளத்தூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரவு, பகலாக தங்கி பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லும் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 529 ஏரிகளில் 35 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது. 60 ஏரிகள் 75 சதவீதத்தையும் 100 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளன. மேலும், கடந்த சில நாட்களாக திருக்கழுக்குன்றம், செய்யூர், மாமல்லபுரம் பகுதிகளில் அதிகளவு மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாற்று படுகையில் வாயலூர், ஈசூர், பழைய சீவரம் ஆகிய பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பாலாற்றை ஒட்டியுள்ள திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் குடிநீர் தேவையும் பூர்த்தியாகி உள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்- 1.2 மிமி, உத்திரமேரூர்- 5, வாலாஜாபாத்-2, ஸ்ரீபெரும்புதூர்-4, குன்றத்தூர்-13, செம்பரம்பாக்கம்-9.8 என மழை பதிவாகியுள்ளது.

The post திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : SARAL ,THIRUVALLUR, KANCHIPURAM, CHENGALPATTU DISTRICT ,THIRUVALLUR ,Kanchipuram ,Chengalpattu ,Ruvallur ,Thiruvallur, ,Kanchipuram, ,Chengalpattu district ,
× RELATED குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு