×

மகா சரஸ்வதியின் மகத்துவம்

நவராத்திரியை வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு சம்பிரதாயத்திற்கு தகுந்தாற்போல் அனுஷ்டித்து கொண்டாடுவார்கள். பொதுவாகவே வட இந்தியாவில் துர்க்கா பூஜை என்று விமரிசையாக கொண்டாடுவார்கள். தென்னகத்தை பொறுத்தளவில் இந்த சரந் நவராத்திரியில் அதாவது சரத் காலத்தில் வரக்கூடிய சாரதா நவராத்திரியில் அம்பிகையை இரண்டு வகையில் ஆராதிப்பது வழக்கம். ஒன்று லலிதா மஹா திரிபுரசுந்தரியாக வித்யா முறைப்படி ஆராதிப்பது உண்டு. அப்படிப்பட்ட வித்யா முறைக்கு ஒரு அங்கமாக, லலிதா திரிபுரசுந்தரி ராஜராஜேஸ்வரியாக ஆராதனை பண்ணக்கூடிய அதேசமயத்தில், அதற்கு அங்கமாக அதே அம்பாளை சண்டிகா பரமேஸ்வரியாக ஆராதனை செய்வது என்பதும் வழக்கம். இரண்டுமே ஒரே நேரத்தில் சம்பிரதாயமான பூஜைகளில் நவாவரண அர்ச்சனை, சஹஸ்ரநாமம், த்ரிசதி அர்ச்சனை என்று செய்து கொண்டேயிருக்கும்போது இன்னொரு பக்கம் சண்டிகா பரமேஸ்வரி ஆராதனையும் நடக்கும்.

இந்த சண்டிகா பரமேஸ்வரியின் ஆராதனை எப்படி நடக்குமெனில், தேவி மகாத்மியம் என்று சொல்லக் கூடிய துர்க்கா சப்தசதி பாராயணம் இந்த நவராத்திரியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏன், இது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது எனில், கலியுகத்தில் அதிகமாக பலன் தரக்கூடிய அல்லது உடனடியாக பலன் தரக்கூடிய சிரேஷ்டமான மந்திர சாஸ்திரம் ஒன்று உண்டெனில், ஒரு மந்திரம் உண்டெனில் அது தேவி மகாத்மியம். இதில் இருக்கக் கூடிய ஒவ்வொரு அட்சரமும் ஒரு மந்த்ரம். எழுநூறு ஸ்லோகங்கள் என்று சொல்கிறோம். அதனால் துர்கா சப்த சதீ என்று பெயர். இந்த துர்க்கா சப்த சதீயில் முழுக்க முழுக்க அம்பிகையினுடைய பிரபாவம். இது மார்க்கண்டேய புராணத்தில் ஒரு பகுதியாக வருகின்றது.தேவி மகாத்மியம் என்கிற அற்புத நூலானது மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரங்களாக விரிந்திருக்கிறது. மகாபாரதத்தில் கீதைபோல மார்க்கண்டேய புராணத்தில் தேவி மகாத்மியம். மந்திரங்களால் கோர்க்கப்பட்ட துர்க்கையின் லீலைகளையும் மகிமைகளையும் சரிதமாக சொல்லும் நவீனத்துவம் நிறைந்தது. துர்க்கா சப்த சதீ என்றே அழைப்பர். சப்த சதம் என்றாலே எழுநூறு என்று பொருள்.

துர்க்கா சப்த சதீ என்பதைத்தான் நாம் தேவி மகாத்மியம் என்றழைக்கிறோம். சரிதமே மந்திர வாக்குகளாக அழுத்தப்பட்டிருக்கிறது. மந்திர ஒலிகள் தனக்கே உண்டான சக்தியை சிந்துகிறது. வெளிப்பட்ட சக்தியானது நம்முடைய வாழ்வின் இக பர அனைத்து நலன்களையும் கிடைக்கச் செய்கின்றது. சக்தியின் ஆற்றல் சரிதம் முழுவதும் அடர்ந்திருப்பதால் இவளை தேவி மகாத்மிய மைய நாயகியை சண்டிகா என்பர். எழுநூறு மந்திரங்களும் அவளின் முழுத் திருவுருவாக விளங்குவதால் சண்டீ என்று போற்றுகின்றனர். நவராத்திரியின்போது தேவி மகாத்மியத்தை பாராயணமாகச் செய்வதும், அதையே சண்டீ ஹோமமாக நிகழ்த்துவதும் நெடுங்கால வழக்கத்திலுள்ளது. தேவி மகாத்மியம் என்கிற திவ்ய சரிதத்திற்குள் நுழைவோம் வாருங்கள்.அப்பேற்பட்ட மகாசக்தியான பராசக்தியின் லீலைகளை கர்ணம் என்கிற காதால் கேட்பதேயாகும். இறையருளை பெறுவதன் முதல்படியாக கேட்டல் என்கிற ஸ்ரவணத்தை வைத்திருக்கின்றனர். கேட்கும்போதே மனதின் மாசுக்களை அகற்றி, மாயைகளை ஒதுக்கி பூரண பிரகாசமான மாதேவியின் சொரூபத்தை காட்டும் சக்தி படைத்ததே தேவி மகாத்மியம். இப்பேற்பட்ட மகாத்மியத்தை ஸுமேதஸ் என்கிற மகாமுனிவர் சுரதன், சமாதி என்பவர்களுக்கு உரைத்தார். புராணம் நிகழ்ந்தது இரண்டாவது மனுவான ஸ்வாரோசிஷரின் ஆயுட்காலத்தில் நடைபெற்றது. தற்போது வைவஸ்தரின் தோன்றல்களாக நாம் இருக்கிறோம். மனதிற்கு அகப்படாத காலவெளியில் நிகழ்ந்த புராணம் இன்று அவளருளால் நமக்கு கிடைக்கிறது.

சுரதன் என்பான் அந்தக் காட்டில் அமரும்போது உள்ளுக்குள் விம்மி வெடித்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டான். தன் எதிரே கண்கலங்கி நின்ற உச்சைசிரவஸ் எனும் குதிரையை மெல்ல வருடினான்.‘‘நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. இன்னும் நீ என்னை பேரரசன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். என்னைச் சுற்றியுள்ளோரை நான் மனிதர்கள் என்று நினைத்தேன். இப்போது உன்னைப் பார்க்கும்போது அது தவறு என்று புரிகிறது. நீ புறப்படு’’ என்று பிடரி நீவி தட்டிக் கொடுத்தான். மெல்ல அந்த கானகத்திற்குள் நடந்தான்.இப்போது கானகத்தில் தன்னைப்போல ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டான், சுரதன். அவன் எதிரே போய் நின்றவுடன் சுரதனின் காம்பீர்யத்தை பார்க்கும்போதே ராஜாவாக இருக்குமோ என்று எண்ணி கைகூப்பினான். கூப்பிய கைகளை மெதுவாக விடுவித்து இந்த கானகத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டான்.என் பெயர் சமாதி. நானொரு வியாபாரி. வியாபாரத்தில் தர்மத்தை கடை பிடித்தேன். என்னை ஏமாற்றி என் உறவினர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தனர். பிள்ளைகளும், உறவுகளும் ஒதுக்கினர். வீட்டில் மனைவியும் வெறுப்பை உமிழ்ந்தாள். சந்நியாசி என்றால் காட்டிற்குச் சென்று வாழ வேண்டியதுதானே. வீட்டில் உங்களுக் கென்ன வேலை என்று கடுமையாக கேட்டுவிட்டாள். இடுப்புத் துண்டோடு இங்கு வந்து விட்டேன் என்றான்.

இப்படி இருவருக்கும் ஸூமேதஸ் உரைத்ததுதான் தேவி மகாத்மியம்.தேவி மகாத்மியம் மூன்று பகுதிகளாக இருக்கிறது. பிரதம சரித்திரம், மத்திம சரித்திரம், உத்தம சரித்திரம் என்று மூன்று பகுதிகளாக இருக்கிறது. இதில் பிரதம சரித்திரத்திற்கு அம்பாள் சண்டிகா பரமேஸ்வரியானவள் தன்னை மகாகாளியாக வெளிப்படுத்திக் கொண்டதை சொல்லக் கூடியது பிரதம சரித்திரம். அதனால் பிரதம சரித்திரத்திற்கு மகாகாளி தேவதை. சண்டிகா பரமேஸ்வரி மகாலட்சுமியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது மத்திம சரித்திரம். எல்லோருக்கும் நன்கு தெரிந்த இந்த மகிஷாசுரமர்த்தினி என்பது இந்த மத்திம சரித்திரத்தில்தான் வருகிறது. அதற்கு அடுத்து இருக்கக் கூடிய மூன்றாவதாக இருக்கக் கூடிய உத்தம சரித்திரத்தில் அம்பாள் தன்னை மகாசரஸ்வதியாக வெளிப்படுத்திக் கொண்டதைச் சொல்வது உத்தம சரித்திரம். அதனால் உத்தம சரித்திரத்திற்கு மகாசரஸ்வதி தேவதை. இப்போது சரஸ்வதி பூஜையாக இருப்பதால், சரஸ்வதி பூஜையை மையப்படுத்தி பேசுவதால் இந்த தேவி மகாத்மியத்தில் உத்தம சரித்திரத்தில் வரக்கூடிய சரஸ்வதியினுடைய பிரபாவம் எப்படி? அதை தேவி மகாத்மியம் எப்படி காண்பித்துக் கொடுக்கிறது.

முதல் சரித்திரத்தில் அம்பிகை மகா காளியாக வரும்போது எப்படி ஆவிர்பவிக்கிறாள் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு ஆவிர்பாவம் என்று சொல்லும்போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அம்பாள் நித்ய வஸ்துவானவள் ஆவாள். அவளுக்கு தோற்றமோ மறைவோ கிடையாது. தோன்றி மறையக் கூடிய விஷயம் கிடையாது. அவள் நித்தியமான வஸ்து. ஆனால், ஏன் அவளை தோன்றுகிறாள் ஆவிர்பவிக்கிறாள் என்று சொல்கிறோமெனில், நாம் லலிதா சஹஸ்ரநாமத்தில் பார்த்தோமானால் ரிஷிகளுக்காகவும், தேவர்களுக்காகவும் வேண்டுதலுக்காக அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். அந்த வெளிப்படுத்துதலைத்தான் நாம் ஆவிர்பாவம் என்று சொல்கிறோம்.
(மகத்துவம் தொடரும்..)

The post மகா சரஸ்வதியின் மகத்துவம் appeared first on Dinakaran.

Tags : Maha Saraswati ,Navratri ,North India ,Durkha Puja ,Tennagatha ,Ambika ,Saran Navratri ,Sarat Navratri ,
× RELATED மஹா சரஸ்வதியின் மகத்துவம்