×

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடிகள்

*புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

விளாத்திகுளம் : தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் உள்பட 12 வட்டாரங்கள் உள்ளன. ரத்த சோகையினால் பாதிப்பு மற்றும் பலவீனமாக வளரும் 3 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான உணவு வழங்க உலக வங்கி நிதி உதவியுடன் கிராமங்கள்தோறும் அங்கன்வாடி மையங்கள் சுமார் 40 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் தக்காளி சாதம் மற்றும் முட்டை, சாம்பார் சாதம், கொண்டை கடலை, பயறு, காய்கறி சாதம், லெமன் சா தம், பருப்பு சாதம் என மதிய உணவு வழங்கப்படுகிறது.

புதூர் வட்டாரத்தில் நாகலாபுரம், புதூர், பூதலாபுரம் என 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றின் கீழ் சுமார் 97 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மையத்தில் விட்டுவிட்டு பணிக்கு சென்று விடுவார்கள். அங்கு அக்குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு உள்ளன.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பராமரித்தல், சிறு கதைகள் சொல்லிக் கொடுத்தல், கேலி சித்திரங்கள், நற்பண்புகள் கற்பித்தல், சத்துமாவு கொலுக்கட்டை வழங்குதல், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு வழங்குதல் போன்றவை பணியாளர்களின் பணியாகும்.

பல கிராமங்களில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தில் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. புதூர் வட்டாரத்தில் கம்பத்துப்பட்டி, மணியக்காரன்பட்டி, மு.கோட்டூர், புதூர் பேரூராட்சியில் அம்பேத்கர் காலனி, சவுடாம்பிகா கோயில் அருகே உள்ள மையம், கண்ணப்பர் தெரு மையம் என 10க்கும் மேற்பட்ட மையங்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் பாதுகாப்பின்றி விரிசல் ஏற்பட்ட மண் சுவர் வீட்டில், பெயர்ந்து போன ஜல்லி உள்ள தரைத்தளத்தில் இருக்கையின்றி ஆபத்தான நிலையில் இருள் சூழ்ந்த கட்டிடத்தில் செயல்படுகின்றன. இதுபோன்று மாவட்டம் முழுவதும் பல மையங்கள் உள்ளன. இதனால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே பாதுகாப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புத்தாடை கிடைக்குமா?

அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வியாண்டு தொடக்கத்தில் பெண் குழந்தைகளுக்கு கவுன், ஆண் குழந்தைகளுக்கு டீ சர்ட் மற்றும் அரைக்கால் சட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு நவம்பர் மாதம் ஆகியும் புத்தாடை வழங்கப்படவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடிகள் appeared first on Dinakaran.

Tags : Anganwadis ,Thoothukudi ,Vlathikulam ,Anganwadi ,Tuticorin district ,Kovilpatti ,
× RELATED விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி