×

சலுகை பெறுவதற்காக மதம் மாறுவது மிகப்பெரிய மோசடி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


புதுடெல்லி: “அரசின் சலுகைகளை பெறுவதற்காக மட்டுமே மதம் மாறுவது என்பது அரசியல் சாசனம் மீதான மிகப்பெரிய மோசடி” என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுவை மாநிலத்தில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவரின் தந்தை இந்து, தாய் கிறிஸ்தவர். எனவே, செல்வராணி தன்னை ஒரு இந்து என்று கூறி எஸ்.சி. சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் செல்வராணியின் தந்தை உள்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரிய வந்தது. இதனால் செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் மறுத்து விட்டார். இதையடுத்து செல்வராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் “தான் சிறு வயது முதல் இந்து மதத்தை பின்பற்றுகிறேன்.

முன்னதாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாலும் பின்னர் இந்து மதத்துக்கு திரும்பி விட்டேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “செல்வராணி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மறுமதமாற்றம் தொடர்பான உரிய ஆதாரத்தை வழங்கத் தவறி விட்டார்கள். எனவே செல்வராணிக்கு எஸ்.சி சாதி சான்றிதழ் வழங்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்து தீர்ப்பு வழங்கி இருந்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செல்வராணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ” ஒருவர் தான் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மதம் மாறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் சமூகத்தின் ஒட்டுமொத்த நோக்கங்களையும் சிதைக்கிறது.

அதாவது சலுகைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாறுவது என்பது அரசியல் சாசனத்தின் மீதான மிகப்பெரிய மோசடி. மேலும் அது இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு முரணானது. இதில் மனுதாரர் கிறிஸ்தவராக மாற ஞானஸ்தானம் பெற்ற பின்னரும், தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் மனுதாரர் செல்வராணியின் இரட்டைக் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே எனக்கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post சலுகை பெறுவதற்காக மதம் மாறுவது மிகப்பெரிய மோசடி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Selvarani ,Puduwai ,Dinakaran ,
× RELATED ஜாமீன் மனு நிராகரிக்கும் போது விசாரணை...