×

மாமல்லபுரம் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கார் மோதியதில் 5 பெண்கள் உடல் நசுங்கி சாவு: கல்லூரி மாணவன் கைது, 2 பேர் தப்பியோட்டம்

சென்னை: மாமல்லபுரம் அருகே, பண்டிதமேட்டில் சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மாமல்லபுரம் அடுத்த, பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி மனைவி யசோதா(50), குப்பன் மனைவி கவுரி(62), சின்னராஜ் மனைவி லோகம்மாள்(65), முத்தன் மனைவி ஆந்தாயி(65), சாமிநாதன் மனைவி விஜயா(65) ஆகிய 5 பேரும் இணைபிரியாத தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இவர்கள், தினமும் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு ஓஎம்ஆர் சாலையோரம் அமர்ந்திருப்பார்கள்.

இந்நிலையில், வழக்கம்போல் தோழிகள் 5 பேரும் தங்களது மாடுகளை நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், ஓஎம்ஆர் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமர்ந்திருந்தனர். அப்போது, மாமல்லபுரம் அடுத்த குண்ணப்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் சென்னையில் இருந்து பையனூர் நோக்கி அதிவேகமாக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஜோஷ்வா(19) என்ற மாணவன் ஓட்டி வந்துள்ளார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது ஏறி இறங்கியது. இதில், யசோதா கவுரி, லோகம்மாள், ஆந்தாயி, விஜயா ஆகிய 5 பேரும் தலை நசுங்கியும், உடல்கள் சிதறியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த பண்டிதமேடு பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டதால் காரில் வந்த 4 மாணவர்களும் தப்பி ஓட முயன்றனர். அப்போது, கல்லூரி மாணவர்களான சித்தாலபாக்கத்தை சேர்ந்த ஜோஷ்வா, திருமுல்லை நகர் பெருங்குடி பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் என 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மற்ற 2 மாணவர்கள் தப்பியோடி விட்டனர். பின்னர், விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் இருந்து 2 மாணவர்களையும் மீட்டு ஒரு காரில் அமர வைத்தனர்.

அப்போது, பொதுமக்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் அந்த காரை சுற்றி நின்று காரில் இருக்கும் 2 மாணவர்கள் மற்றும் தப்பியோடிய 2 மாணவர்களை உடனடியாக பிடித்து வந்து எங்களிடம் ஒப்படையுங்கள் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் திடீரென ஓஎம்ஆர் சாலையில் அமர்ந்து இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயண சர்மா, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்க வேண்டும். அப்போது தான் மறியலை கைவிட்டு, உடல்களை எடுக்க அனுமதிப்போம். இல்லையென்றால், 2 நாட்கள் ஆனாலும் மறியலை கைவிட மாட்டோம் என கத்தி கூச்சலிட்டனர். அதற்கு, சப்-கலெக்டர் நாராயண சர்மா, எஸ்பி சாய்பிரணீத் ஆகியோர் இதுகுறித்து உடனடியாக நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பப்படும். தற்போது, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல வழி விடுங்கள் என கூறினர். இதையேற்று, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த ஜோஷ்வாவை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய 2 கல்லூரி மாணவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பி சாய் பிரணீத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மாமல்லபுரம் அருகே, சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது கார் ஏறி இறங்கியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* சாவிலும் இணைபிரியாத தோழிகள்
கார் விபத்தில் இறந்த தோழிகள் 5 பேரும் சுபநிகழ்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு சென்றாலும் சேர்ந்துதான் செல்வார்களாம். இணைபிரியாத தோழிகளாக இருந்த இவர்கள் 5 பேரும் இணைபிரியாமல் விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

* தாயின் உடலை மடியில் வைத்து கதறிய மகன்
கார் ஏறி இறங்கிய விபத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்களும் கண் இமைக்கும் நேரத்தில் பலியாகினர். இந்த, விபத்தில் உயிரிழந்த தனது தாயின் உடலை தூக்கி மடியில் வைத்து மகன் கதறி அழுத சம்பவம் பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவைத்தது.

* உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: பழைய மாமல்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் நேற்று கார் மோதி சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மாமல்லபுரம் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கார் மோதியதில் 5 பெண்கள் உடல் நசுங்கி சாவு: கல்லூரி மாணவன் கைது, 2 பேர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chennai ,Pandithamed ,Govindaswamy ,Yashoda ,Kuppan ,Gauri ,Pandithamedu ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...