×

மேட்டூர் அருகே சோதனைச்சாவடியில் சொகுசு பஸ்சை நிறுத்தி விசாரித்த போலீசார் மீது சரமாரி தாக்குதல்

*வடமாநில டிரைவர், கிளீனர் மீது வழக்கு

மேட்டூர் : மேட்டூர் அருகே, வனத்துறை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரை, வடமாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 30 பேர், சொகுசு பஸ் ஒன்றில் தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று காலை, சேலம் மாவட்டம் மேட்டூர் வழியாக, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சென்றனர். தமிழக-கர்நாடக எல்லையான காரைக்காட்டில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசாரின் சோதனை சாவடியை கடந்து சென்ற போது, அங்கு பணியில் இருந்த தலைமை காவலர்கள் செந்தில்குமார் மற்றும் சுகனேஸ்வரன் ஆகியோர், பஸ்சை நிறுத்தி, அதில் மதுபானங்கள் ஏதும் உள்ளதா? பஸ்சுக்கு பர்மிட் உள்ளதா என கேட்டுள்ளனர். அப்போது, பஸ் டிரைவருக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த பஸ் டிரைவர் சிவநாராயணன் என்பவர், திடீரென காவலரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 போலீசாரும் அவரை திருப்பித் தாக்கினர். இதை கண்டு ஆத்திரமடைந்த பஸ்சின் கிளீனர் அஜய்(20) என்பவர், பஸ்சில் இருந்த இரும்பு குழாயை எடுத்து வந்து, போலீசாரை சரமாரியாக தாக்கினார். இதனை கைகளால் தடுத்த இரண்டு போலீசாரும் படுகாயமடைந்தனர். மேலும், தற்காப்புக்காக அவர்களை பதிலுக்கு திருப்பி தாக்கினர்.

இதனிடையே, போலீசார் மீது வடமாநிலத்தினர் தாக்குதல் நடத்தியதை கண்ட அப்பகுதி கிராம மக்கள், அவர்களை தாக்கத் தொடங்கினர். இதனால், தமிழக-கர்நாடக எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்யராஜ், கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பஸ் டிரைவர் மற்றும் கிளீனரின் தாக்குதலில் படுகாயமடைந்த போலீசார் செந்தில்குமார், சுகவனேஸ்வரன் ஆகியோரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர்களை தாக்கிய டிரைவர் சிவநாராயணன், கிளீனர் அஜய் ஆகியோரை, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மீது போலீஸ்காரர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், சிவநாராயணன் மற்றும் அஜய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். மேலும், பஸ்சில் பயணிகள் இருந்ததால், நேற்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் அந்த பஸ்சை தமிழக எல்லையை கடந்து விட்டு வந்தனர்.

அதே சமயம், இந்த சம்பவம் தொடர்பாக சொகுசு பஸ் டிரைவர் சிவநாராயணன், கொளத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், பஸ்சுக்கான உரிய ஆவணங்களை காட்டிய போதும், சோதனைச்சாவடியில் இருந்த போலீசார், தங்களிடம் பணம் கேட்டதாகவும், தர மறுத்ததால் தங்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது, இரும்பு குழாய் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மேட்டூர் அருகே சோதனைச்சாவடியில் சொகுசு பஸ்சை நிறுத்தி விசாரித்த போலீசார் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Barrage ,Mattur ,NORTH STATE ,MATUR ,FOREST ,Uttar Pradesh ,Saramari ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் அரசுபள்ளி மாணவர்களுடன்...