×

அரசியலமைப்பு தின பவள விழா: கட்சி தலைவர்கள் வாழ்த்து


சென்னை: அரசியல் அமைப்பு தினத்தின் பவள விழாவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் தலைவர்): 75 ஆண்டுகளுக்கு முன்னால், இந்திய வரலாற்றில் மறக்க இயலாத அத்தியாயம் எழுதப்பட்டது. நம்மை ‘இந்திய பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோலும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களும் பெண்களுமாக 299 பேர் இணைந்து 2 ஆண்டுகள் 11 மாதங்கள், 17 நாட்கள் அயராத சிந்தனையின் விளைவாக உருவாக்கி, அமல்படுத்திய நாள். தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், நிலைநிறுத்தவும், இந்தியராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவும், இந்த சாசனத்தை உருவாக்கியவர்களின் எண்ணத்தைப் பெருமைப்படுத்தவும் இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): நமது அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மை ஜனநாயகம் சமவுடைமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும் தலைசிறந்த அரசியல் சாசனச் சட்டமாகும். விடுதலை போராட்ட வீரர்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக அம்பேத்கர் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் உறுதியாகத் துணை நிற்போம்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): இந்தியாவை இயக்குவது அரசியலமைப்புச் சட்டம்தான். இறையாண்மை அளிப்பதும் அரசியலமைப்புச் சட்டம்தான். அத்தகைய சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம்.

அன்புமணி (பாமக தலைவர்): கடந்த 75 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மாற்றப்பட்டாலும் கூட, அதன் அடிப்படை மாறாமல் இருப்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு. அந்த சட்டத்தை மதிப்பதுடன், அதன்வழி நடப்போம்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட 75வது ஆண்டில் அரசியல் சாசனத்தை நமக்கு வழங்கிய சட்ட மேதை அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவதோடு, அதில் இடம்பெற்றிருக்கும் சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): பெரும் மக்கள்தொகை கொண்ட பல மொழிகளும், பல சாதி, மதத்தினரும் இணைந்து இருக்கின்ற நமது இந்தியாவில் அனைவருக்குமான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற முறையில் இந்த அரசியல் அமைப்பு, 75 ஆண்டு காலத்திற்கு முன்பே தொலைநோக்கு பார்வையோடு மிகவும் நியர்த்தியோடும், திறனோடும், கட்டமைக்கப்பட்ட நமது அரசியல் அமைப்பு நான் என்பது இந்தியர் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள் ஆகும்.

The post அரசியலமைப்பு தின பவள விழா: கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Constitution Day Coral Ceremony ,CHENNAI ,Coral Festival of Political System Day ,Kamal Haasan ,President ,People's Justice Centre ,Constitution Day ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!