×

அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்யப்படவில்லை டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: ஒன்றிய அரசு கைவிரிப்பு


திருச்சி: டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிப்பதற்கான பரிந்துரை, அதிமுக ஆட்சியில் வரவில்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது. டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் எடுக்கும் பணிகள், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2021 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கடந்த 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்து, தமிழ்நாடு வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து, டெல்டா பகுதியை தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்தது.

இந்நிலையில், மக்களவையில் நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பினார். அதில், ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் கடந்த 5 ஆண்டுகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக, மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூரில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி எண்ணிக்கை எவ்வளவு, கடந்த 5 ஆண்டுகளில் மேற்கண்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் அல்லது எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கு ஆட்சேபனை சான்றிதழ் அல்லது சுற்றுச்சூழல் அனுமதி கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் ஆய்வுக்கு அனுமதி கோரிய இடங்களின் பட்டியல் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்களை தடை செய்யவும் ஏதேனும் ஒன்றிய கொள்கை உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மாநிலங்களுக்கான ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவிக்கையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிப்பது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு பரிந்துரையும் ஒன்றிய அரசுக்கு வரவில்லை. கடந்த 5ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கக்கூடிய 3திட்டங்களினுடைய கால அளவை மட்டுமே ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் மட்டும் நிலுவையில் உள்ளது.

அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்படவும் இல்லை. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகள் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக ஒன்றிய அரசால் அறிவிக்க முடியும். அதே சமயத்தில் தமிழக அரசிடம் இருந்து இதுவரையில் எந்த ஒரு கோரிக்கையும் அனுப்பப்படவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த ஒரு முன் மொழிவும் வராத காரணத்தால் இது தொடர்பாக ஒன்றிய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

The post அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்யப்படவில்லை டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: ஒன்றிய அரசு கைவிரிப்பு appeared first on Dinakaran.

Tags : Delta ,EU government ,Trichy ,ONGC ,Duma ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...