புழல்: செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில் கனமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று பெய்த கனமழையின் காரணமாக செங்குன்றம் ஜிஎன்டி சாலை நெல்மண்டி மார்க்கெட் முதல் பேரூராட்சி அலுவலகம், செங்குன்றம் போலீஸ் நிலையம் வரை சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு கழிவுநீரை கடந்து சென்றனர்.
மேலும், பல்வேறு பணிகளுக்காக வந்தவர்கள், பைக்குகளை சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற நிலையில் நேற்று திடீரென பெய்த மழையின் காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து பைக்குகளை சூழ்ந்துள்ளது. செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் மழைநீர் கால்வாய் சாலையின் இரண்டு பக்கங்களிலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால், நெல்மண்டி மார்க்கெட் பகுதியில் இருந்து செங்குன்றம் காவல் நிலையம் செல்லும் திசையில் கால்வாய் பணிகள் தொடங்காததால் பழைய கால்வாயில் இருந்து மழைநீர் நிரம்பி, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது.
நேற்று பெய்த கனமழையில் பழைய கால்வாய் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து இரண்டு பக்கங்களிலும் செல்கிறது. இதுகுறித்து சாலையை பராமரிக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. அப்போது, விடுபட்ட இடங்களில் புதிதாக கால்வாய் அமைக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் பல மாதங்களாகியும், இதுவரை புதிய கால்வாய் அமைக்கும் பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பழைய கால்வாயும் தூர்வாரப்படாமல் உள்ளது.
இதன் விளைவாக தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, கால்வாயில் மழைநீர் நிரம்பி கழிவுநீர் அதிலிருந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து நெல்மண்டி மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க பழைய கால்வாய்களை தூர்வரவும், புதிதாக மழைநீர் கால்வாய்களை அமைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
The post செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்: பழைய கால்வாயும் தூர்வாரப்படவில்லை; கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.