×
Saravana Stores

அய்யனேரி – சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை: சீரமைக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே அய்யனேரி – சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யனேரியிலிருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை, சுமார் 3 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. அய்யனேரி, அய்யனேரி காலனி, விலாசபுரம், ராமகிருஷ்ணாபுரம், பரவத்தூர், வெங்கபட்டு, சோளிங்கர், திருத்தணி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரமுள்ள இச்சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இவ்வாறு, பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் கீழே விழுந்து, அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே குண்டும் குழியுமாக பழுதான நிலையில் இருக்கும் 2 கிமீ சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அய்யனேரி – சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ayyaneri ,Solingar ,RK Pettah ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.பேட்டை விபத்து நடந்த இடத்தில்...