×

முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. ரூ.75 லட்சம் கொடிநாள் நிதி

முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கொடி நாள் நிதியாக 75 லட்சம் ரூபாயை சன் டி.வி. குழுமம் வழங்கியுள்ளது. ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், டிசம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் இந்த நிதியின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சன் டி.வி. குழுமம் கொடி நாள் நிதியாக 75 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் சன் டி.வி. சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வின் போது, மாவட்ட துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரியத்தின் உதவி இயக்குநர் எட்வர்ட் ராஜ் மரியா ஜான், நரசிம்மன் உடனிருந்தனர்.

இந்திய பாதுகாப்பு படையின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட இருப்பதாக முன்னாள் ராணுவ வீரர்கள் நலவாரிய உதவி இயக்குநர் எட்வர்ட் ராஜ் மரியா ஜான் தெரிவித்தார். கொடி விற்பனை வாயிலாக திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நலவாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக கொடி நாள் நிதி வழங்கிய சன் டி.வி., புயல், கொரோனா உள்ளிட்ட பேரிடர் நிகழ்வுகளின் போது, பல்வேறு அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்காகவும் சன் டி.வி. பல ஆண்டுகளாக நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. ரூ.75 லட்சம் கொடிநாள் நிதி appeared first on Dinakaran.

Tags : Sun TV ,Day ,Veterans Flag Day ,Dinakaran ,
× RELATED முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான...