×

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலக்காடு : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாலக்காடு மற்றும் மலம்புழா கமிட்டிகள் ஒருங்கிணைப்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான குடும்பத்தினர் உயிரிழந்தனர்.

தாய், தந்தையரையும், வீடுகளையும் இழந்து பரிதவித்த நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதை ஒன்றிய அரசு புறகணித்து வருகின்றது. வயநாடு வாழ் மக்களை புறக்கணித்து, ஏமாற்றி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வயநாடு மக்களின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்க வேண்டும், உரிய நிவாரண நிதி முறைப்படியாக குறித்த காலத்தில் வழங்க வேண்டும்.

வீடுகள் இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பிள்ளைகளின் படிப்பு செலவுகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும். வாழ்வாதாரமாக விளங்கிய டீ, காபி, ரப்பர், மிளகு தோட்டங்கள் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மலம்புழா மண்டல செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட கட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணியில் ஜெயபாலன், மவாட்ட கவுன்சில் உறுப்பினர்கள் மோகன்தாஸ், மல்லிகா, டி.எஸ்.தாஸ், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

The post வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Wayanad district ,Palakkad ,Head Post Office ,Communist Party of India Palakkad ,Malampuzha Committees ,Union government ,Wayanad district of ,Kerala ,Dinakaran ,
× RELATED கோபி தலைமை அஞ்சலகத்துடன் கிளை தபால்...