*போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் : திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் வடக்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்காக 116 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைக்க கூடாது என விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், வடக்கு உழவர் சந்தை சாலையில் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படாமல் வடக்கு உழவர் சந்தையை ஒட்டிய சாலையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு உழவர் சந்தையில் அதிகாலை நேரத்தில் வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் போவதாகவும் அதே நேரத்தில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு மிகப்பெரும் இடையூறாக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவும் அப்பகுதி மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அதிகாலை நேரத்தில் உழவர் சந்தை செயல்படும் நேரத்தில் சாலையோரம் கடை அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் இதனை கண்கானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வடக்கு உழவர் சந்தை அலுவலர் கூறுகையில், ‘‘வடக்கு உழவர் சந்தையில் 116 கடைகள் உள்ளன. வார நாட்களில் 80 முதல் 90 வரையிலும் வார இறுதி நாட்களில் 120 வரையிலும் விவசாயிகள் வந்து கடைகளுக்கான டோக்கன் பெற்று கடைகளை நடத்தி வருகின்றனர்.
ஆனால், விவசாயிகளின் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வியாபாரிகளும் அதே நேரத்தில் சந்தைக்கு வெளியே சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வருகின்றனர். 100 மீட்டர் தொலைவிற்கு கடைகள் அமைக்க கூடாது என வலியுறுத்தியும் கடைகள் அமைக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அடங்கிய விளம்பர போர்டுகள் வைக்கப்பட்ட நிலையில் அவை உடைக்கப்பட்டு மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதனை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.
The post உழவர் சந்தை சாலையை ஆக்கிரமித்து கடைகள் appeared first on Dinakaran.