×

ஊட்டியில் டிவிஷன் கால்பந்து போட்டி துவக்கம்

*30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

ஊட்டி : நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஊட்டியில் டிவிஷன் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்பார்கள். இதற்கென மாவட்டம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட கால்பந்து கிளப் அணிகள் உள்ளன.

2024-25ம் ஆண்டுக்கான ‘பி’ மற்றும் ‘சி’ டிவிஷன் கால்பந்து போட்டிகள் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் துவங்கியுள்ளன. இதில் ‘பி’ டிவிஷன் பிரிவில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 13 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் மோதி கொள்ளும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்கள் பிடிக்கும் அணிகள் ‘ஏ’ டிவிஷனுக்கு தரம் உயர்த்தப்படும். கடைசி இரு இடங்கள் பிடிக்கும் அணிகள் ‘சி’ டிவிஷனுக்கு தரமிறக்கப்படும். ‘சி’ டிவிஷன் பிரிவில் 19 அணிகள் பங்கேற்றுள்ளன.

இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் மோதி கொள்வார்கள். 2 பிரிவுகளிலும் முதல் 3 இடங்கள் பிடிக்கும் அணிகள் லீக் பிரிவில் விளையாடுவார்கள். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி ‘பி’ டிவிஷனுக்கு செல்லும். இப்போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஊட்டி பூங்கா சாலையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானம் மற்றும் கோத்தகிரியில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து நேற்று காலை நடைபெற்ற சி டிவிஷன் போட்டியில் ஐஎஸ்சி. இத்தலார் அணியும், என்எப்சி. நஞ்சநாடு அணியும் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் கோல் போடாததால் டிராவில் முடிந்தது. அடுத்து நடைபெற்ற போட்டியில் ஜெகதளா எப்சி. அணியும், ஹில்ஸ் கிங் அணியும் மோதின 3-2 என்ற கோல் கணக்கில் ஜெகதளா அணி வெற்றி பெற்றது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

கால்பந்து சங்க செயலாளர் மோகனமுரளி கூறுகையில், ‘‘ஊட்டி மற்றும் கோத்தகிரியில் பி மற்றும் சி டிவிஷன் கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ளன. இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. வார இறுதி நாட்களில் போட்டிகள் நடக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஏ டிவிஷன் போட்டிகள் நடைபெற உள்ளது’’ என்றார்.

The post ஊட்டியில் டிவிஷன் கால்பந்து போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Feeder Division ,NEILGIRI DISTRICT FOOTBALL ASSOCIATION ,Epochi ,Dinakaran ,
× RELATED 55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக...