×

ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதால் மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு பீகார் பார்முலா..? பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பேரவை பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவதால் பரபரப்பு

மும்பை: ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதால் மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு பீகார் பார்முலாவை பாஜக பின்பற்ற வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சட்டப் பேரவை பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில், ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. பாஜக 132 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரசுக்கு 16 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணிக்கு 20, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் அணிக்கு 10, சமாஜ்வாதிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைத்தன. தற்போது பாஜக கூட்டணியில் சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல் வர்களாகவும் உள்ளனர். தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே கூறுகையில், ‘மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) நிறைவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். புதிய முதல்வர் குறித்து பாஜக, ஷிண்டே அணி, அஜித் பவார் அணி இணைந்து முடிவு செய்யும். முதல்வர் யார்? என்பதை 24ம் தேதி (இன்று) முடிவு செய்வோம்’ என்றார். இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் புதிய முதல்வர் யார்? என்பது குறித்து மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த முறை முதல்வர் பதவியில் எந்த சமரசமும் இருக்காது என்று பாஜக தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர். ஒருவேளை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானால், ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் துணை முதல்வர்களாக பதவியேற்க வேண்டியிருக்கும். அஜித் பவாரை பாஜகவால் சமாதானப்படுத்த முடியும்; ஆனால் ஏக்நாத் ஷிண்டே இத்திட்டத்திற்கு ஒப்புக்கொள்வாரா? என்பது கேள்வியாக உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும் சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே பாஜக கூட்டணி தர்மத்தைப் பின்பற்றும் என்றும், யாரையும் புறக்கணிக்காது என்றும் சிவசேனா தலைவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சிவசேனா தலைவர்கள் கூறுகையில், ‘பீகாரில் பாஜக அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை கொண்ட பெரிய கட்சியாக உள்ளது. ஆனால் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான எம்எல்ஏக்களை கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரை முதல்வராக்கியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவிலும் ஏக்நாத் ஷிண்டேவை தொடர்ந்து முதல்வராக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒன்றிய அரசில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. அத்தகைய சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது. எங்களது (சிவசேனா) கட்சிக்கு மக்களவையில் 7 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர். அல்லது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருவர் முதல்வர் என்ற பார்முலா அடிப்படையில், தேவேந்திர பட்நாவிசுக்கும், ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்த விவாதமும் நடந்து கொண்டு வருகிறது. இருவரில் ஒருவர் தற்போது முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே இன்றுக்குள் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்றனர்.

The post ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதால் மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு பீகார் பார்முலா..? பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பேரவை பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Chief Minister ,Aknath Shinde ,BJP ,Ajit Bawar ,MUMBAI ,AJIT PAWAR ,Bihar ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிராவில் இலாகா ஒதுக்கீடு...