×

வேடந்தாங்கல் அருகே உள்ள நெல் பாதுகாப்பு மையத்தில் பாரம்பரிய விதை உற்பத்தி

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகே உள்ள சுக்கன் கொல்லை கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பது, நெல் ரகங்களின் விதை உற்பத்தி, இயற்கை விவசாயத்துக்கான மாதிரி பண்ணை ஆகியவை இங்கு செயல்பட்டு வருகிறது. 170 பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்து அறுவடை செய்து வருகின்றனர். இங்கு பாதுகாக்கப்பட்டுவரும் நெல் ரகங்களில் 50க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மிக முக்கியமான பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.‌

இந்த மையம் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் முயற்சியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அடுக்கு நெல், அனந்தனூர் சன்னா, ஒரிசா வாசனை சீரகசம்பா, கருடன் சம்பா, கிச்சிலி சம்பா, குருவை களஞ்சியம், காட்டுயாணம், வெள்ளை மிளகு சம்பா, திருநெல்வேலி கிச்சிலி, சேலம் சம்பா, சிவப்பு கவனி, செங்கல்பட்டு சிறுமணி, தங்க சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் விதை மட்டுமில்லாமல் இயற்கை பண்ணை அமைந்திருப்பதால் அதன்மூலம் இயற்கை உரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு அதற்கு மாற்றாக இருக்கும் இயற்கை உரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் பயிர் செய்து அறுவடைக்கு பிறகு நெல்மணிகளை எவ்வாறு பதப்படுத்தி வைப்பது, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எப்படி உருவாக்குவது போன்றவை குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

‘‘இன்றைய காலத்தில் உணவே மருந்து என்று இருக்க வேண்டுமென்றால் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும்’’ என்று மையத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post வேடந்தாங்கல் அருகே உள்ள நெல் பாதுகாப்பு மையத்தில் பாரம்பரிய விதை உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : Paddy Conservation Center ,Vedantangal ,Madhuranthakam ,Sukan Kollai ,Chengalpattu ,
× RELATED திருவெறும்பூர் அடுத்த கிளியூர்...