×
Saravana Stores

பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட்

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்த முருகன், அதே துறையின் எஸ்பியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பொறுமையிழந்த பெண் எஸ்பி, இதுகுறித்து டிஜிபியிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழகத்தில் விசாரணை நடந்தால், விசாரணை நேர்மையாக நடக்காது என்பதால் ஆந்திராவுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வழக்கு மீண்டும் தமிழகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் முருகன், சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் சுல்தான் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்தார். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசியாகத்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர், தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன் கடந்த வாரம் தள்ளுபடி செய்தார். அதோடு, வெள்ளிக்கிழமை விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, வழக்கு விசாரணை சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் சுல்தான் முன்பு நேற்று வந்தது. ஆனால் இந்த வழக்கில் முன்னாள் ஐஜி முருகன், விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நீதிமன்றமாக சென்ற நீங்கள், இப்போது விசாரணைக்கு மட்டும் ஏன் ஆஜராக மறுக்கிறீர்கள் என்று கேட்ட மாஜிஸ்திரேட், முருகனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் அடுத்த விசாரணைக்கு முருகனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். ஏற்கனவே பெண் போலீஸ் எஸ்பியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது முருகன் மீதான வழக்கும் விசாரணை நடைபெற தொடங்கியுள்ளதால், போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Silmisham ,IG ,Chennai ,Murugan ,SP ,DGB ,Silmisham Police IG ,Dinakaran ,
× RELATED டெல்லியில் நடந்த அகில இந்திய தடகள...