*பணம் வாங்க காத்திருந்தபோது 5 பேர் கும்பல் சிக்கியது
சேலம் : சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் எறும்புத்தின்னியை மர்மநபர்கள் சிலர் பிடித்து வந்து சமூக வலைதளங்கள் மூலம் பல லட்சத்திற்கு விலை பேசி விற்க முயற்சித்து வருவதாக மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் தலைமையில் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ் மற்றும் வன ஊழியர்கள், டேனிஷ்பேட்டை வனத்தை ஒட்டிய கிராமங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், டேனிஷ்பேட்டை அருகேயுள்ள லோகூர் பகுதியில் நேற்று, 5 பேர் கும்பல் சந்தேகப்படும் படி சுற்றித்திரிவது தெரியவந்தது. அந்த கும்பலை வனச்சரகர் தங்கராஜ் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர்.
டேனிஷ்பேட்டை-லோகூர் சாலையில் உள்ள பாலத்தில் நின்றுகொண்டு எறும்புத்தின்னியை கைமாற்ற முடிவு செய்து காத்திருந்தபோது, 5 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த ஒரு பையை சோதனையிட்டபோது, உள்ளே பெரிய அளவிலான எறும்புத்தின்னி இருந்தது. அந்த எறும்புத்தின்னியையும், 2 பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள், ஏற்காடு தாலுகா கண்ணப்பாடியை சேர்ந்த மணி (45), ராஜேஷ்குமார் (40), வாழப்பாடி வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த முருகன் (60), சேலம் வலசையூரை சேர்ந்த பெரியசாமி (34), லோகூரை சேர்ந்த சௌந்தரராஜன் (60) எனத்தெரியவந்தது.
இதில், மணி, ராஜேஷ்குமார் ஆகியோர் ஏற்காடு வனத்தில் வலை விரித்து பெரிய அளவிலான எறும்புத்தின்னியை பிடித்துள்ளனர். பின்னர், பேஸ்புக் மூலம் அதன் படத்தை வெளியிட்டு, மருத்துவ குணம் கொண்டது எனக்கூறி ரூ.1 கோடிக்கு விற்க பேரம் பேசியுள்ளனர். இந்த தொகையை கொடுத்து, வாங்கிக் கொள்வதாக சிலர் முன்வந்துள்ளனர். அந்த நபர்களை லோகூருக்கு வரவழைத்து பணத்தை பெற்றுக்கொண்டு, எறும்புத்தின்னியை கொடுக்க காத்திருந்தபோது சிக்கியது தெரியவந்தது.
இதையடுத்து சிக்கிய மணி, ராஜேஷ்குமார், முருகன், பெரியசாமி, சௌந்தரராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான 5 பேரையும் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் இவர்களிடம் இருந்து எறும்புத்தின்னியை ரூ.1 கோடிக்கு விலை பேசி வாங்க வந்த கும்பலை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணுளி பாம்பு போல், எறும்புத்தின்னியை பிடித்து வந்து மோசடியாக விற்க முயன்ற கும்பல் கைதான இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஏற்காடு காட்டில் வலை விரித்து பிடித்த எறும்புத்தின்னி ₹1 கோடிக்கு பேரம் appeared first on Dinakaran.