×
Saravana Stores

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3457 சதுர அடி மற்றும் 4763 சதுர அடி வீட்டுமனைகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா சங்கர் உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2013ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டது. அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அமைச்சர் என்பதால் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனும் போது, சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி எதிர் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு டிசம்பர் 19ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,I. Periyaswamy ,Anti-bribery Department ,ICourt ,CHENNAI ,Chennai High Court ,Anti-Corruption Department ,Periyasamy ,DMK ,Dinakaran ,
× RELATED வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் வழக்கை...