×

திருப்பதி கோயிலில் வரும் 1ம்தேதி முதல் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன டிக்கெட் கோட்டாக்களும் ரத்து: தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன டிக்கெட் கோட்டாக்களையும் ரத்து செய்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநில சுற்றுலாத்துறை சார்பில் தரிசன டிக்கெட் கோட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த டிக்கெட்டுகள் பெற பக்தர்கள் நேரடியாக அந்தந்த மாநில சுற்றுலாத்துறை இணையஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனை இடைத்தரகர்கள் மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்பதாக தொடர் புகார்கள் வந்தது. இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு அனைத்து மாநில சுற்றுலாத்துறைக்கும் வழங்கப்பட்ட தரிசன டிக்கெட் கோட்டாவை ரத்து செய்துள்ளது. இதுவரை தெலங்கானா, ஆந்திர மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்டுகளும், கர்நாடக மாநிலத்திற்கு 750, கேரளாவிற்கு 250, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தலா 500 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. இனி அனைத்து மாநில சுற்றுலாத்துறைக்கும் ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் வரும் டிசம்பர் 1ம்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 டிக்கெட் வரை அரசு போக்குவரத்துக் கழக பஸ் முன்பதிவின்போது ₹300 டிக்கெட் பெறும் விதமாக டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

இந்த டிக்கெட்டுகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பதில் திருப்பதியில் வழங்கப்படும் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு வழங்கக்கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகளுக்கான கோட்டாவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஐபி தரிசன டிக்கெட் அதிகரிப்பு
திருப்பதி ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்தில் ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்திற்காக தினமும் 100 வாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இது 200 ஆக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு கவுன்டரில் இந்த டிக்கெட் பெறலாம். இதேபோல் திருமலையில் உள்ள கோகுலம் ஓய்வு கட்டிடத்தின் பின்புறம் உள்ள வாணி டிக்கெட் கவுன்டரில் ஆப்லைனில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 900ல் இருந்து 800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (22ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரிசனத்திற்கு 18 மணி நேரம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 60,803 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 21,930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ₹3.27 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 19 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 18 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்வார்கள். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி கோயிலில் வரும் 1ம்தேதி முதல் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன டிக்கெட் கோட்டாக்களும் ரத்து: தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Visana ,Tirupathi Temple ,Devastana Administration ,Thirumalai ,Devastanam ,Tirupathi Elumalayan Temple ,Swami ,Tirupathi ,Elumalayan ,Temple ,Administration ,Dinakaran ,
× RELATED திருப்பதி கோயிலுக்கு சென்று...