×
Saravana Stores

வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை: ஜல்லி கற்களால் விபத்து அபாயம்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை என்று கோரிக்கை எழுந்துள்ளது. சாலை வளைவில் குவிந்து காணப்படும் ஜல்லி கற்ககளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரயில் நிலையம், காவல் நிலையம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மேலும் வாலாஜாபாத் சுற்றிலும் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் செல்கின்றனர். இந்நிலையில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் – ஒரகடம் சாலையில் நாள்தோறும் கனரக லாரிகள், தொழிற்சாலை பேருந்துகள் மட்டுமின்றி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுழற்சி முறையில் இருசக்கர வாகனங்களில் அதிகளவில் செல்வது வழக்கம். இது மட்டுமின்றி இந்த வாலாஜாபாத் – ஒரகடம் சாலையையொட்டி உள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையில்தான் நாள்தோறும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு பகுதியில் வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதியில் செல்லும் கனரக லாரிகளில் உள்ள ஜல்லி கற்கள், எம்சாண்ட் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் சரிந்து சாலையிலேயே கொட்டி விடுகின்றன. இதனால் பின் தொடர்ந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், கார் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடையும் சூழல் நிலவுகிறது. ஒரு சில நேரங்களில் ஜல்லி கற்களில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழலும் நாள்தோறும் நிலவுகின்றன. அதிகபாரங்களை ஏற்றி வரும் கனரக லாரிகள் தார்ப்பாய் இன்றி இந்த வழியாக செல்கின்றன. மேலும் சேர்க்காடு பகுதியில் உள்ள வளைவு பகுதியில் அதிக வேகத்தில் திரும்புவதால் லாரியில் உள்ள கட்டுமான பொருட்கள் மொத்தமாகவும் சிலநேரங்களில் சாலையில் சிதறி கிடக்கின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் – ஒரகடம் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்க்காடு பகுதியில் ஆறு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் கனரக வாகனங்களில் இருந்து சிதறும் எம்சாண்ட், ஜல்லி கற்கள் சாலையின் இருபுறமும் சாலையின் கொட்டி வழியே தெரியாதவாறு மண்மேடுகளாக படர்ந்து கிடக்கின்றன. இதனை அகற்ற பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவித்தும் இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சாலையின் வளைவு பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிதறி கிடக்கும் மண், ஜல்லி போன்றவற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழல் நாள்தோறும் அரங்கேறுகிறது. இந்த பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எந்தவித வாகன கட்டுப்பாடையும் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே நாள்தோறும் நடைபெறும் விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

* லாரிகள் மீது நடவடிக்கை
வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கல்குவாரிகள் மற்றும் எம்சாண்ட் மணல் தயாரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கட்டுமான பணிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்கிகின்றன. அப்படி செல்லப்படும் லாரிகள் முறையாக தார்ப்பாய் இன்றியும், அளவிற்கு அதிகமாக இடுபொருட்களையும் எடுத்துச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

* தடுப்பு அமைக்க வேண்டும்
வாலாஜாபாத் – ஒரகடம் சாலையில் உள்ள சேர்க்காடு பகுதியில் அதிகமான தொழிற்சாலை பேருந்துகள் நின்று செல்வது வழக்கம். இவை மட்டுமின்றி அரசு பேருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன. இதனால் எப்போதுமே இந்த பேருந்து நிறுத்தம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். மேலும் பேருந்துக்காக சாலையை கடக்க முயலும் முதியோர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் இப்பகுதியில் வேகமாக வரும் கார் லாரி உள்ளிட்ட வாகனங்களால் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த இப்பகுதியில் பேரிகார்டு அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை: ஜல்லி கற்களால் விபத்து அபாயம்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Komagat ,Kodakad ,Dinakaran ,
× RELATED கோழி வளர்ப்பு பயிற்சி