×
Saravana Stores

சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடியில் புதிய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பு ஏற்படுத்தப்படும்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் புதிய நீர்வடிகட்டுதல், மறுசுழற்சி ஏற்படுத்தப்படும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் ரூ.3 கோடியே 41 இலட்சம் மதிப்பீட்டில் 4.5 MLD கொள்ளளவு கொண்ட புதிய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பு சென்னை குடிநீர் வாரியத்தால் அமைக்கப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் 1942 – ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது இந்நீச்சல் குளம் நிறுவப்பட்டது. பின்னர் 1947 -ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 77 ஆண்டுகளாக பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நீச்சல் குளம் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 08.10.2024 அன்று திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்நீச்சல் குளத்தில் ஏற்கெனவே உள்ள நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சிக்கான வசதிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வசதிகள் தற்போதைய நிலையில் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் நவீன வசதிகளுடன் கூடிய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பினை ஏற்படுத்திட சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில், ரூ.3 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் இந்நீச்சல் குளத்தில் 4.5 MLD கொள்ளளவு கொண்ட நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பினை நிறுவிய பின்னர் 5 ஆண்டுகளுக்கு இயக்கி பராமரிக்கும் பணிகள் சென்னை குடிநீர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

The post சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடியில் புதிய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பு ஏற்படுத்தப்படும்: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Marina ,Chennai Drinking Water Board ,Chennai ,Dinakaran ,
× RELATED மெரினா நீச்சல் குளம்: நீர் வடிகட்டுதல், மறுசுழற்சி