*இருசக்கர வாகனஓட்டிகள் கடும் அவதி
நெல்லை : நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் 18 டயர்களுடன் கூடிய கனரக வாகனங்கள் அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி இயக்கப்படுவதால் இருசக்கர வாகனஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் துறைமுக பகுதிகளில் இருந்து 18 டயர்களை கொண்ட லாரிகள் இரவு நேரங்களில் கேரளாவுக்கு சரக்குளை ஏற்றிச்செல்கின்றன.
இந்த லாரிகள் பகல் நேரங்களில் திரும்பி வரும் போது நெல்லை – அம்பாசமுத்திரம் சாலையில் மேலப்பாளையம் சந்தை, விஎஸ்டி சந்திப்பு, முன்னீர்பள்ளம், கருங்குளம் போலீஸ் வாகன சோதனை சாவடி, மேலப்பாளையம் சந்தை ரவுண்டான, தெற்கு புறவழிச்சாலை வழியாக தூத்துக்குடி, நாகர்கோவில் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.
இத்தகைய 18 எண்ணிக்கை கொண்ட டயர்களுடன் கூடிய மிக நீளமான லாரிகள் நெல்லை – அம்பை சாலையில் முன்னீர்பள்ளம், கருங்குளம் வாகன சோதனை சாவடிகள், விஎஸ்டி சந்திப்பு, சந்தை ரவுண்டானா பகுதிகளை கடந்து செல்லவே சிரமப்படுகிறது. இத்தகைய லாரிகள் சாலைகளில் அச்சுறுத்தும் வகையில் இயக்கப்படும் போது முன்னால் மற்றும் பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் பெற்றோர், ஆட்டோவில் பயணிப்போர் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளகின்றனர்.
மேலும் இந்த லாரிகள் ரவுண்டானா பகுதிகளில் திரும்புவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சாலையில் இயக்கப்படும் பிற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 18 டயர்களை கொண்டு இயக்கப்படும் கனரக லாரிகளுக்கு மாவட்ட நி்ர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நெல்லை – அம்பை சாலை, முன்னீர்பள்ளத்தில் இருந்து ஆரைக்குளம், ஜோதிபுரம் வழியாக நாகர்கோவில் சாலைக்கு செல்லும் வகையில் 18 டயர்களை கொண்ட கனரக லாரிகள் இயக்கப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post நெல்லை – அம்பை சாலையில் அச்சுறுத்தும் வகையில் 18 டயர் லாரிகள் இயக்கம் appeared first on Dinakaran.