×

வேலூர் மக்களின் எதிர்பார்ப்பு எப்போது பூர்த்தியாகும் பயன்பாட்டிற்கு வராமல் பாழடையும் விமான நிலையம்: அடிக்கடி ரன்வே சுற்றியுள்ள புதர்களை அகற்றும் அதிகாரிகள்

வேலூர்: வேலூர் விமான நிலையம் பயன்பாடடிற்கு வராமல் பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ரன்வே சுற்றியுள்ள புதர்களை அகற்றும் பணிகள் மட்டுமே நடக்கிறது. வேலூர் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் 2017ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கி முடிந்துள்ளது. முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு இயக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது. தொடர்ந்து விமான நிலையத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் விமான நிலையத்தில், 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விமானங்களை இயக்குவதற்கான சிக்னல் பரிமாற்றம் குறித்து சோதனைகள் கடந்தாண்டு நடந்தது. இதையடுத்து, விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை தென்மண்டல துணை பொதுமேலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் வேலூர் விமான நிலையத்தை ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனால், விரைவில், விமானங்களை இயக்குவதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வந்த இந்திய சிவில் போக்குவரத்து விமான இயக்குனரக அதிகாரிகள் 3 நாட்கள் ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிந்து டெல்லிக்கு சென்று பின்னர் 15 நாட்களில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை எந்த அனுமதியையும் ஒன்றிய அரசு வழங்கவில்லையாம்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் வேலூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து விமான போக்குவரத்து ஆணைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் ஆய்வின் போது, விமான நிலையத்தை சுற்றியுள்ள கம்பி வேலியை அகற்றி விட்டு, கற்கள் மூலம் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிக்காக ரூ.10 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், விமான நிலையத்தை சுற்றி கற்களான சுற்றுச்சுவருக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வேலூர் விமான நிலையத்தில் ரன்வே மற்றும் வளாகத்தில் போதிய பாரமரிப்பு பணிகள் இல்லாததால் முட்புதர்களை வளர்ந்து காணப்படுகிறது. இதையடுத்து, ரன்வே, விமான நிலைய வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வேலூர் விமான நிலையத்தில், விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை விமான ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணையம் அனுமதி வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். இதனால் வேலூரில் இருந்து விமானங்கள் பறக்குமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வேலூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

The post வேலூர் மக்களின் எதிர்பார்ப்பு எப்போது பூர்த்தியாகும் பயன்பாட்டிற்கு வராமல் பாழடையும் விமான நிலையம்: அடிக்கடி ரன்வே சுற்றியுள்ள புதர்களை அகற்றும் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore airport ,Dinakaran ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...