×

கனவோடு கண் விழித்து ஏழை மாணவர்கள் எழுதுகின்றனர் குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம்; பதிவாளர் விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவு

மதுரை: குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற கனவோடு கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் பலர் படிப்பதாகவும், சிலர் குறுக்கு வழியில் வெல்வதாகவும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான சலுகையை பலர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த 4 பேர் போலியான சான்றிதழ்களை அளித்துள்ளனர். அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட தமிழ் வழி சான்றில் பிரச்னை இல்லை. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களில் 16 பேரின் சான்றிதழில் 3 பேர் மீது சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘நமது நாட்டில் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு இரவு நேரங்களில் கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் மிகவும் சிரமப்பட்டு படித்து தேர்வுகளை எழுதுகின்றனர். இதுபோன்று குறுக்கு வழியில் போலியான சான்று வழங்கி தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்ட விரோதமானது. இது ஏழை மாணவர்களின் கனவை புதைக்கும் செயலாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தவிர பிற பல்கலைக்கழகங்களில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2 மாத அவகாசம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

The post கனவோடு கண் விழித்து ஏழை மாணவர்கள் எழுதுகின்றனர் குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம்; பதிவாளர் விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt Madurai Branch ,Madurai ,iCourt ,Shakti Rao ,Tirumangalam, Madurai District ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி