×
Saravana Stores

மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி, ஜார்க்கண்டில் கடும் போட்டி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியீடு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலத்திலும் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு டிவி சேனல் மற்றும் நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜ வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாகவும், ஜார்க்கண்ட்டிலும் கடும் போட்டி நிலவும் என முடிவுகள் வெளியாகி உள்ளது. 288 எம்எல்ஏக்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஆட்சியை பிடிக்க 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 81 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜார்க்கண்ட்டில் 41 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா-என்சிபி கூட்டணி ஆட்சியிலும், ஜார்க்கண்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்த வரையில், ஆக்சிஸ் மை இந்தியா காங்கிரஸ்-ஜேஎம்எம் கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 49 முதல் 59 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 17 முதல் 27 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது. எலக்ட்டோரல் எட்ஜ் கருத்துக்கணிப்பில் பாஜ கூட்டணி 32, இந்தியா கூட்டணி 42 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ்-ஜேவிசி கருத்துக்கணிப்பில் பாஜ கூட்டணி 40 முதல் 44 இடங்களும், இந்தியா கூட்டணி 30 முதல் 40 இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதே போல பி மார்க் கருத்துக்கணிப்பில் பாஜ கூட்டணி 31 முதல் 40 இடங்களிலும், இந்தியா கூட்டணி 37 முதல் 47 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பீப்பிள் பல்ஸ், சாணக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் கணிப்புகளில் பாஜ கூட்டணி வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எலக்டோரல் எட்ஜ், டெய்னிக் பாஸ்கர் போன்ற நிறுவனங்களின் கணிப்புகளில் காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி 150 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. சாணக்யா, மேட்ரிஸ், பிமார்க், பீப்பிள்ஸ் பல்ஸ் போன்ற கணிப்புகளில் பாஜவின் மகாயுதி கூட்டணி வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

ஓட்டு போட படையெடுத்த பாலிவுட் நட்சத்திரங்கள்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு போட மும்பையில் நேற்று பாலிவுட் நட்சத்திரங்கள் படையெடுத்து வந்தனர். ஓட்டு போட்ட அவர்கள், ‘மக்கள் அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தினர். பாலிவுட்டின் பாதுஷா என புகழப்படும் ஷாரூக்கான் தனது மனைவி கவுரிகான், மகன் ஆர்யன் கான், மகள் சுஹானாவுடன் மாலையில் வந்து வாக்களித்தார். இதே போல மாலை 4.45 மணிக்கு சல்மான் கான் தனது தந்தையும் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான், சகோதரர்கள் அர்பாஸ் மற்றும் சோஹைல் உள்ளிட்டோருடன் பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார்.

நடிகர்கள் அக்ஷய் குமார், ராஜ்குமார் ராவ், நடிகரும் இயக்குநருமான பர்கான் அக்தர், அவரது சகோதரி ஜோயா அக்தர், நடிகை கரீனா கபூர், அவரது கணவர் சைப் அலிகான், ஷ்ரத்தா கபூர், கார்த்திக் ஆர்யன், மாதுரி தீட்சித், கோவிந்தா, ஊர்மிளா மடோன்கர், ஜான் ஆபிரகாம், அனன்யா பாண்டே, சோனாலி பிந்த்ரே, சோனுசூட் உள்ளிட்டோர் வாக்களித்தனர். மூத்த நடிகர் அனுபம் கேர் வாக்களித்த பின் அளித்த பேட்டியில், முதல்முறை வாக்காளர்கள் ஓட்டு போட வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். நடிகரும் பாஜ எம்பியுமான ஹேமா மாலினி, வாக்களிப்பது மக்களின் உரிமையும் கடமையும் கூட என்றார். ரித்தேஷ் தேஷ்முக், அவரது மனைவியும் நடிகையுமான ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பாபல்கானில் வாக்களித்தனர்.

The post மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி, ஜார்க்கண்டில் கடும் போட்டி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : BAJA ,JHARKHAND ,New Delhi ,Maharashtra ,Bajaj Regime ,
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி...