புதுடெல்லி: ‘‘அரசியல் பின்புலம் இல்லாத, 1 லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர புதிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ மாதாந்திர நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிகப்பெரியது. இளைஞர்களின் மனங்கள் முனைப்புடன் செயலாற்றும் போதும், தேசத்தின் முன்னேற்றப் பயணத்திற்காக ஆய்வு செய்யும் போதும், சிந்திக்கும் போதும் கண்டிப்பாக அவர்கள் அருமையான பாதையை அமைக்கிறார்கள்.
இதற்காக, வரும் ஜனவரி 11, 12ம் தேதிகளில் டெல்லி பாரத மண்டபத்தில் இளைஞர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவின் இளம் தலைவர்கள் உரையாடல்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நாடெங்கிலும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதில் பங்கேற்பார்கள். அவர்களில் இருந்து 2,000 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பாரத மண்டபத்தில் நடக்கும் உரையாடலில் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
எந்த அரசியல் பின்புலமும் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென செங்கோட்டையில் உரையாற்றிய போது குறிப்பிட்டேன். அப்படிப்பட்ட 1 லட்சம் புதிய இளைஞர்கள் இந்த சிறப்பு பிரசாரத்தின் மூலம் அரசியலுக்கு கொண்டு வரப்படுவார்கள். டிஜிட்டல் கைது போன்ற டிஜிட்டல் மோசடிகளில் அதிகம் இரையாவது முதியவர்கள்தான். எனவே அவர்களிடம் டிஜிட்டல் கைது குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கடமை.
‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்’ என்ற இயக்கம் தொடங்கி வெறும் 5 மாதத்தில் நாடு முழுவதும் 100 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நான் கயானா சென்றிருந்த போது அந்நாட்டின் அதிபர் இர்பான் அலி, அவரது மனைவியின் தாய் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் என்ற இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். எந்த ஒரு தாய்க்கும் நம்மால் நன்றிக்கடனை ஈடு செய்ய முடியாது என்றாலும், தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, நாம் அவருடைய இருப்பை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
* சிட்டுக்குருவியை பாதுகாப்போம்
சிட்டுக்குருவிகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘நீங்கள் அனைவரும் சிறுவயதில் சிட்டுக்குருவியை உங்கள் வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். பல்லுயிர் பெருக்கத்தை பராமரிப்பதில் சிட்டுக்குருவிக்கு மிக மகத்துவமான பங்களிப்பு உண்டு. ஆனால் இன்று நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளில் பலர், சிட்டுக்குருவியை படங்களிலோ, காணொளிகளிலோ மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இனிமையான பறவையை மீண்டும் மீட்டெடுக்க, சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதுபோல நீங்களும் முயற்சித்தால், சிட்டுக்குருவி கண்டிப்பாக மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகி விடும்’’ என்றார்.
The post 1 லட்சம் புதிய இளைஞர்களை அரசியலில் இணைக்க திட்டம்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.