×

ஆன்லைன் கடன் செயலி மோசடி திருச்சி சிறையில் இருந்த 2 சீனர்கள் அதிரடி கைது : அமலாக்கத்துறை நடவடிக்கை

திருச்சி: ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி செய்ததாக திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீன நாட்டை சேர்ந்த இருவரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இதன் தாக்கம் பலமடங்காக இருந்தது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட சீனாவை சேர்ந்த சில நிறுவனங்கள் இந்தியாவில் சட்ட விரோத டிஜிட்டல் கடன் செயலிகளை (பெயர்) உருவாக்கினர்.

இதன் வாயிலாக பலருக்கும் வட்டியை முன்கூட்டியே பிடித்தம் செய்துகொண்டு கடன் வழங்கினர். அந்த வகையில் ரூ.49 கோடி வரை கடன் வழங்கினர். இந்த கடன்களை பெற்றுக்கொண்டு திரும்ப செலுத்தாதவர்களை நேரில் அழைத்து, அவர்கள் செல்போன்களை பறித்துக்கொண்டு, ஆபாசமாக பேசி பலவழிகளிலும் தொந்தரவுகள் கொடுத்தனர். இதன் ஒருபகுதியாக கடன் பெற்று செலுத்த தவறியவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில், ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்த புகார்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் வந்தன. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை போலீசார், சீனாவை சேர்ந்த ஷியான் யுவான் மகன் யுவான்லூன் (25), ஷியோடாகூன் மகன் ஷியோ யமாவ் (40) ஆகியோரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்திருந்தனர். இதுகுறித்து அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அன்னிய செலவானி மூலம் குறிப்பிட்ட செயலி வாயிலாக ஹாங்காங்குக்கு பணம் பறிமாற்றம் நடந்து தெரியவந்தது.

இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமுக்கு கடந்த நவ.13ம் தேதி 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் வந்தனர். பின்னர் சிறப்பு முகாமில் இருந்த சீன நாட்டை சேர்ந்த 2 பேரை தனியாக ஒரு அறைக்கு அழைத்து வந்து, அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இருவர் மீதும் 294B, 384, 506(I) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இருவரையும் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அனுமதியுடன், திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கைது செய்து, சென்னை அழைத்து சென்றனர். பின்னர் சென்னை நீதிமன்றம் அனுமதியுடன் 3 நாள் கஸ்டடியில் அதிகாரிகள் விசாரணை நடத்தி மீண்டும் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவ.29ம் தேதி வரை காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் கடன் செயலி மோசடி திருச்சி சிறையில் இருந்த 2 சீனர்கள் அதிரடி கைது : அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Directorate of Enforcement ,Corona ,Dinakaran ,
× RELATED கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே...