புதுடெல்லி: “அன்பு, தைரியம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டு இந்திரா காந்தி” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டி உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “இந்தியாவின் இரும்பு பெண்மணியான இந்திரா காந்தியின் வாழ்வில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் உத்வேகம் பெறுகின்றனர். ஏனெனில் அவர் வாழ்நாள் முழுவதும் போராட்டம், தைரியம் மற்றும் தேசத்தை கட்டி எழுப்புவதில் ஆற்றல் மிக்க தலைமையின் உருவகமாக திகழ்ந்தார். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க தன் இன்னுயிரை தியாகம் செய்தார்” என புகழாரம் சூட்டி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “அன்பு, தைரியம் ஆகியவற்றின் சிறந்த எடுத்துக்காட்டு இந்திரா காந்தி. தேசநலன்களின் பாதையில் அச்சமின்றி நடப்பதே உண்மையான பலம் என்பதை நான் அவரிடமிருந்து கற்று கொண்டேன். அவரது நினைவுகளே என் பலம். அது எனக்கு எப்போதும் வழிகாட்டுகிறது” என புகழஞ்சலி செலுத்தி உள்ளார். காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி தன் எக்ஸ் பதிவில், “பழங்குடி மக்களின் கலாச்சாரம் சிறந்தது, தனித்துவமானது.
ஏனெனில் அது இயற்கையை மதிக்கிறது, பாதுகாக்கிறது. என் பாட்டி இந்திரா காந்தி எப்போதும் மகாராஷ்டிராவின் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் நந்தூர்பாரில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவர் பிரதமர் ஆனதும் பழங்குடி மக்களுக்காக பல முக்கியமான சட்டங்களை இயற்றி அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளை தன் கொள்கைகளால் பலப்படுத்தினார். இன்று சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த கோருவது என இந்திரா காந்தியின் சிந்தனைகளை காங்கிரஸ் முன்னெடுத்து செல்கிறது” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
The post 107வது பிறந்தநாளில் காங்கிரஸ் தலைவர்கள் புகழஞ்சலி அன்பு, தைரியத்தின் எடுத்துக்காட்டு இந்திரா காந்தி appeared first on Dinakaran.