×

காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்: இளம் வயதினர் ஆர்வம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புதிதாக வாக்காளர்கள் சேர இளம் வயதினர் அதிக ஆர்வம் காட்டினர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தாண்டு ஜனவரி 1ம்தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக்.29ம்தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால், நவ.16,17 மற்றும் 23,24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். குறிப்பாக, புதிய வாக்காளர் சேர்க்க படிவம் 6, வெளி்நாட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6ஏ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்றுரைக்க 6பி, வாக்காளர்பட்டியில் பெயர் சேர்ப்பதை ஆட்சேபிக்கவும், ஏற்கெனவே உள்ள பெயரை நீக்குவதற்கும் படிவம் 7ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1401 அனைத்து வாக்கு சாவடி மையங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்கள் முகாம்கள் நடைபெற்றது.

இதற்காக ஏற்கனவே பணியமற்ற அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வாக்கு சாவடி முகவர்கள் உள்ளிட்டோர் அங்கு பணிபுரிந்தனர். குறிப்பாக, புதிய இளம் வாக்காளர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்கள் வழங்கி தங்களை வாக்காளராக சேர்க்கும்படி விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இதற்கான பணிகள் மேற்கொள்ள‌ சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்: இளம் வயதினர் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kanchi District ,Kanchipuram ,Kanchipuram district ,Election Commission of India ,Kanchi ,Dinakaran ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...