×
Saravana Stores

குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்சார வசதி இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் புதிய ரயில் நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

ஆனால், பெரும்பாலான பயணிகள் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் சுமார் 60 ஆண்டுகால பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் எனப்படும் பழைய ரயில் நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த ரயில் நிலையத்தில் நாளுக்குநாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது. இந்த, ரயில் நிலையம் வழியாக சென்னையிலிருந்து திருமால்பூர் வரை பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர வாரத்தில் 4 நாட்கள் தென்மாவட்டங்களுக்கும், திருப்பதிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மாவட்ட தலைநகரமான காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையில் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு பணிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள், பெரும்பாலும் மின்சார ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். தங்களின் பயணத்திற்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பழைய ரயில் நிலையத்தை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான அடிப்படை வசதிகள் குறைந்து கொண்டே வருகின்றன. குடிநீர் வசதி இல்லை. இருக்கைகள் உடைந்தநிலையில் கிடக்கின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துபோகும் இந்த ரயில் நிலையத்தில் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் இருக்கு… ஆனா இல்லை… என்கிற கதையாக எப்போதும் திறக்கப்படுவதில்லை. இதனால், மாலையில் பணிக்கு சென்று திரும்பும் பெண் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில்தான் இந்த பழைய ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது என ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் போதிய விளக்குகள் இல்லாததால் ரயில் நிலைய வளாகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனை, சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சமூக விரோதிகள் ரயில் நிலைய வளாகத்தில் மது அருந்துவது உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க மின் விளக்கு வசதியையும் ஏற்படுத்தித்தர வேண்டும் பயணிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

* இருக்கை வசதியில்லை
தினந்தோறும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் பழைய ரயில் நிலையத்தில் போதுமான இருக்கை வசதி இல்லை . இதனால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பிளாட்பார்ம் பகுதியில் மேற்கூரை இல்லாததால் வெயில் மற்றும் மழை நேரங்களில் மிகவும் சிரமமாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

* சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடம் மற்றும் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ரயில் நிலையங்களில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் அதை கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

அதேபோல், குற்றவாளிகள் ரயில்களில் ஏறி தப்பினால் அவர்களை பிடிப்பதும் சவாலாக உள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் இருந்தால் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறையும். எனவே, பொதுமக்கள் அதிகம் புழங்கும் முக்கிய இடமான காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்
காஞ்சிபுரத்தில் குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் அருகில் இந்த ரயில் நிலையம் இருப்பதால் பெரும்பாலானோர் இந்த ரயில் நிலையத்தை தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இரவு 9 மணிக்கு மேல் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து வரும் குடிமகன்கள் ரயில் நிலையத்தை பாராக மாற்றி விடுகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், ரயில் நிலைய வளாகம் எங்கள் கட்டுப்பாட்டில் வராது.

செங்கல்பட்டில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் குடிமகன்கள் அட்டகாசத்தால் இரவில் வரும் பயணிகள் அச்சத்துடன் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுகின்றனர். எனவே, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram East Railway Station ,Kanchipuram ,station ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே...