×

முத்துக்குழிவயல் முதல் அகஸ்தியர் மலை வரை குமரியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க ரோப் கார் வசதி: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


நாகர்கோவில்: குமரியின் முத்துக்குழி வயல் முதல் அகஸ்தியர் மலை வரை ரோப் கார் வசதி ஏற்படுத்தி மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்கும் வகையில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டம் அதிகளவில் சுற்றுலா தலங்கள் மற்றும் வன பகுதிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். பழமையான வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளன. குமரி மாவட்டம் கேரளாவிற்கு அருகில் இருப்பதால், இரண்டு பருவ கால நிலைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தட்ப வெட்பநிலை சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

இவ்வாறு வரும் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அழகை ரசிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் மிக குளிரான பிரதேசம் முத்துக்குழிவயல் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி உயரத்தில் உள்ளது. முத்துக்குழிவயல் இருந்து அப்பர் கோதையாருக்கு செல்ல முடியும். முத்துக்குழிவயல் கடும் பனிப்பொழிவு, உறைபனி, வருடம் முழுக்க மழை என சீதோஷ்ண நிலை கொண்டதாகும். குமரியின் காஷ்மீர் என்று முக்குழிவயலை கூறுகிறார்கள். தடிக்காரன்கோணம் அருகில் உள்ள காளிகேசம் என்ற இடத்திலிருந்து பாலமோர், முத்துகுழிவயல் வழியாக சின்ன குற்றியாறு, நெல்லை மாவட்டம் களக்காடு, மாஞ்சோலை, மணிமுத்தாறு, பாபநாசம், அகஸ்தியர் மலை வரை செல்ல முடியும்.

இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். சுற்று வட்ட பாதையில் இவை இயற்கையாகவே அமைந்துள்ளன. எனவே இந்த சுற்றுப்பாதையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் வகையில் கேபிள் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கன்னியாகுமரி வருகின்ற சுற்றுலா மக்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்க முடியும். தற்போது தமிழ்நாடு அரசு சார்பாக பழனி கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆயத்த பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இந்த வரிசையில் குமரி மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்த பரிசீலிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ரோப் கார் வசதிகளை செய்து வருகிறது. இந்த கேபிள் கார் வசதி உலக தரத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பொதுத்துறை நிறுவனம் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் உலக தரத்தில் உள்ள தனியார் நிறுவனம் கூட்டு முயற்சியில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால், குமரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

The post முத்துக்குழிவயல் முதல் அகஸ்தியர் மலை வரை குமரியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க ரோப் கார் வசதி: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Kumari ,Muthukuzhivyal ,Agasthyar Hill ,Nagercoil ,Muthukuzhi field ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே அட்டகாசம் செய்து வரும்...